டெங்கு காய்ச்சல்: பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

கொசு ஒழிப்பு தினத்தையொட்டி, செங்கம், சேத்துப்பட்டு பகுதிகளில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு குறித்து வியாழக்கிழமை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கொசு ஒழிப்பு தினத்தையொட்டி, செங்கம், சேத்துப்பட்டு பகுதிகளில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு குறித்து வியாழக்கிழமை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
செங்கம் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மேல்பள்ளிப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு விழிப்புணர்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் வட்டார மருத்துவ அலுவலர் சிந்தனாசங்கர் கலந்து கொண்டு பேசியதாவது:
டெங்கு கொசுவை ஓழிப்பதற்கு முதல்கட்டமாக குடியிருப்புப் பகுதியை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும். குடியிருப்பைச் சுற்றிக் கிடக்கும் தேங்காய் ஓடு, சைக்கிள் டயர், டீ கப் உள்ளிட்டவற்றில் மழைநீர் தேங்கி கொசுப்புழு உருவாகி டெங்கு கொசு உற்பத்தியாகிவிடும்.
எனவே, மாணவர்கள் வீட்டில் உள்ள பெற்றோரிடம் குடியிருப்புப் பகுதியை சுகாதாரமாக வைத்திருக்கச் சொல்ல வேண்டும். கிராமத்தில் உள்ளவர்களுக்கு தொடர்ந்து 2 நாள்களுக்கு காய்ச்சல் இருந்தால், மருந்துக் கடையில் மாத்திரைகள் வாங்கி சாப்பிடுவதைத் தவிர்த்து, உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குச் சென்று ரத்தப் பரிசோதனை செய்துகொண்டு சிகிச்சை பெற வேண்டும்.
இதன் மூலம் டெங்கு காய்ச்சலை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தடுக்க முடியும் என்றார். கூட்டத்தில் சுகாதார ஆய்வாளர்கள், கிராம செவிலியர்கள், பள்ளி முதல்வர் உள்ளிட்ட நிர்வாகிகள், ஆசிரியர்கள்,
மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கொழப்பலூர்: இதேபோல, சேத்துப்பட்டை அடுத்த கொழப்பலூர் அரசு மருத்துவமனை சார்பில், அந்தப் பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு குறித்து வியாழக்கிழமை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் மருத்துவர் சரவணகுமார், டெங்கு கொசுவை ஓழிக்கும் முறை குறித்து தெரிவித்தார். இதில், சித்த மருத்துவர் வித்யாபதி, கிராம செவிலியர் பூமணி மற்றும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்
கோ.குணசேகரன், மருத்துவ அலுவலர்கள், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். பின்னர், மாணவர்களுக்கு நிலவேம்பு
குடிநீர் வழங்கப்பட்டது.
செய்யாறு: செய்யாறில் உள்ள அரசு பெண்கள், ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெற்ற டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு முகாமில் தொகுதி எம்எல்ஏ தூசி கே.மோகன் கலந்து கொண்டு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினார்.
பின்னர், நடைபெற்ற டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு செய்யாறு சுகாதார மாவட்ட துணை இயக்குநர் கோவிந்தன் தலைமை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர்கள் என்.ஆர்.சங்கரலிங்கம், எம். உமாமகேஸ்வரி, திருவத்திபுரம் நகராட்சி ஆணையாளர் எஸ்.செல்வபாலாஜி, மருத்துவர்கள் செந்தில், பழனி ஆகியோர் முன்னிலை
வகித்தனர்.
முன்னதாக மாணவ, மாணவிகள் கொசு ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியில் பள்ளியின் பெற்றோர் - ஆசிரியர் கழக நிர்வாகிகள், அதிமுக பிரமுகர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் என பலர் கலந்து கொண்டனர்.
குத்தனூர் பள்ளி: செய்யாறை அடுத்த குத்தனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாட்டேரி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஈஸ்வரி தலைமையில், சுகாதார ஆய்வாளர் சம்பத், செவிலியர் கலைவாணி ஆகியோர் மேற்பார்வையில் பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. பின்னர், டெங்கு காய்ச்சல் குறித்த  விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com