மாவட்டத்தில் 27 பேருக்கு டெங்கு பாதிப்பு: ஆட்சியர் தகவல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 27 பேர் டெங்கு பாதிப்பால் சிகிச்சை பெற்று வருவதாக ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 27 பேர் டெங்கு பாதிப்பால் சிகிச்சை பெற்று வருவதாக ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தார்.
திருவண்ணாமலை ஒன்றியம், கண்ணப்பந்தல் கிராமத்தில் மாபெரும் டெங்கு நோய் தடுப்பு பணிகளின் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி தலைமை வகித்தார்.
ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் க.லோகநாயகி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மீரா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார், மகளிர் திட்ட அலுவலர் ஜெயசுதா, கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு டெங்கு நோய் தடுப்புப் பணிகளை தொடக்கி வைத்துப் பேசியதாவது:
திருவண்ணாமலை மாவட்டத்தின் 860 ஊராட்சிகளிலும் உள்ள 5 லட்சத்து 22 ஆயிரத்து 877 குடியிருப்புகளுக்கு தலா 250 கிராம் கிருமிநாசினி பொடி, தலா 50 கிராம் எடையுள்ள கிருமிநாசினி சோப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கிராமப் பகுதிகளில் கொசுப்புழு ஒழிப்புப் பணியில் ஈடுபட்டு வந்த 495 மஸ்தூர் பணியாளர்களுடன், கூடுதலாக 457 பணியாளர்கள் சேர்க்கப்பட்டு மொத்தம் 952 மஸ்தூர் பணியாளர்கள் கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.
பின்னர், கண்ணப்பந்தல் கிராமத்தில் ஆட்சியர் தலைமையிலான அதிகாரிகள் வீடு, வீடாகச் சென்று மழைநீர் தேங்கியிருந்த வீடுகளில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டனர்.
மேலும், ஒவ்வொரு வீட்டுக்கும் தலா 250 கிராம் அளவு கிருமிநாசினி பொடி, 50 கிராம் அளவு கிருமி நாசினி சோப்புகளை வழங்கி அறிவுரை வழங்கினர். கண்ணப்பந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமையிலான அதிகாரிகள், பள்ளி மாணவ, மாணவிகள் சேர்ந்து கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபட உறுதிமொழியேற்றனர்.
நிகழ்ச்சியில், கலால் உதவி ஆணையர் தண்டாயுதபாணி, வட்டாட்சியர் ரவி உள்பட அரசு அதிகாரிகள், பொதுமக்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
27 பேருக்கு டெங்கு பாதிப்பு: இதையடுத்து, செய்தியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி அளித்த பேட்டி:
திருவண்ணாமலை மாவட்டத்தில் 27 பேர் டெங்கு பாதிப்பால் சிகிச்சை பெற்று  வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் முதல் இன்று வரை 2 பேர் டெங்கு காய்ச்சலால் இறந்துள்ளனர்.
அரசு மருத்துவமனைகளில் டெங்கு பாதிக்கப்பட்டவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். தனியார் மருத்துவமனைகளில் டெங்கு சிகிச்சை அளிப்பது குறித்து கூடுதல்
விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com