சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக் கொண்டால் டெங்கு வராது: மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பேச்சு

வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுகாதாரமாக வைத்துக்கொண்டால் டெங்கு காய்ச்சல் வராது என்று, திருவண்ணாமலை மாவட்ட

வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுகாதாரமாக வைத்துக்கொண்டால் டெங்கு காய்ச்சல் வராது என்று, திருவண்ணாமலை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் எஸ்.பானு கூறினார்.
திருவண்ணாமலையை அடுத்த ஆர்ப்பாக்கம் கிராமத்தில் சிறப்பு மனுநீதிநாள் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு வட்டாட்சியர் ஆர்.ரவி தலைமை வகித்தார். சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் டி.ரமேஷ்குமார், வேளாண் அலுவலர் எம்.செல்வராஜ், துரிஞ்சாபுரம் மண்டல துணை வட்டாட்சியர் அமுல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருவண்ணாமலை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் எஸ்.பானு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பட்டா மாறுதல், உள்பிரிவு சான்று, சிறு குறு விவசாயிச் சான்று, வாரிசுச் சான்று என மொத்தம் 49 பயனாளிகளுக்கு ரூ.5.60 லட்சம் மதிப்பில் அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
இதைத் தொடர்ந்து, எஸ்.பானு பேசியதாவது: பொதுமக்கள் தங்கள் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுகாதாரமாக வைத்துக் கொண்டால் டெங்கு காய்ச்சல் வராது. திருவண்ணாமலை மாவட்டத்தில் வேளாண் உற்பத்தி அதிகரித்துள்ளது. பட்டினிச் சாவு என்பதே இல்லை. குழந்தைத் திருமணங்களை தடுத்து நிறுத்த பொதுமக்கள் முன்வர வேண்டும். போலி மருத்துவர்களிடம் பொதுமக்கள் சிகிச்சைக்குச் செல்லக்கூடாது.
அரசு மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை பெற வேண்டும். வருவாய்த் துறை மூலம் பல்வேறு அரசு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
முகாமில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 109 மனுக்கள் பெறப்பட்டன. இதில், 49 மனுக்கள் ஏற்கப்பட்டன. 38 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. 22 மனுக்கள் தள்ளபடி செய்யப்பட்டன.
முகாமில் திருவண்ணாமலை வட்ட தலைமை நில அளவர் மோகன்ராஜ், குறுநில அளவர் ஏழுமலை, சாலை ஆய்வாளர் ஏ.ரமேஷ், முன்னாள் ஊராட்சித் தலைவர்கள் வி.வெங்கடகிருஷ்ணன், ஜி.கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com