கொத்தடிமைகளாக இருந்த 4 குழந்தைகள் உள்பட 11 பேர் மீட்பு

செய்யாறு அருகே மரக்கரி சூளையில் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த 4 குழந்தைகள் உள்பட 11 பேரை வருவாய்த் துறையினர் வெள்ளிக்கிழமை மீட்டனர்.

செய்யாறு அருகே மரக்கரி சூளையில் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த 4 குழந்தைகள் உள்பட 11 பேரை வருவாய்த் துறையினர் வெள்ளிக்கிழமை மீட்டனர்.
செய்யாறு வட்டம், வீரம்பாக்கம் கிராமத்தில் வியாபாரி அக்கீம் என்பவர் மரக்கரியை விற்பனை செய்யும் தொழில் செய்து வருவதாகத் தெரிகிறது. இவரிடம் வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமம் இருளர் இனத்தைச் சேர்ந்த கன்னி, சுப்பாயி, அர்சுணன், ராஜேந்திரன், பிரபு, ராதிகா, பாபு, காமாட்சி, குழந்தைகள் கவிதா, பிரகாஷ், விஜி, பூங்கொடி என 3 குடும்பங்களைச் சேர்ந்த 11 பேர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்தது தெரிகிறது.
சென்னை ஜஸ்டிஸ் மிஷன் என்னும் தன்னார்வ தொண்டு அமைப்பினர் இது குறித்து செய்யாறு கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். புகாரின்பேரில், செய்யாறு வருவாய்க் கோட்டாட்சியர் கிருபானந்தம், வட்டாட்சியர் வி.ஜெயராமச்சந்திரன், காவல் உதவி ஆய்வாளர் இளஞ்செழியன், தொழிலாளர் நல அலுவலர் தனலட்சுமி, தொண்டு நிறுவன முதன்மைப் பாதுகாவலர் கிளாடிஸ், அமைப்பின் வழக்குரைஞர் ராஜ்குமார், சமூக சேவகர் சாலமன், தேத்துறை பிர்கா வருவாய் ஆய்வாளர் சுரேஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர் வெள்ளிக்கிழமை வீரம்பாக்கம் கிராமத்துக்குச் சென்று மரக்கரி சூளையில் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த தொழிலாளர்களிடம் நேரடியாக விசாரணை மேற்கொண்டு அவர்களை உடனடியாக மீட்டனர்.
பின்னர், மீட்கப்பட்டவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் நிவாரணத்தொகையாக பெரியவர்களான 7 பேருக்கும் தலா ரூ. ஆயிரம் மற்றும் அவர்களுக்கான விடுதலைச் சான்று ஆகியவற்றை செய்யாறு கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் கிருபானந்தம் வழங்கினார். இதையடுத்து, அவர்களை சொந்த ஊர்களுக்கு வருவாய்த் துறையினர் அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வியாபாரி அக்கீம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, வீரம்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் சுதா, வந்தவாசி வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com