மாணவர்களிடமுள்ள ஆளுமைகளை ஆசிரியர்கள் வெளிக்கொணர வேண்டும்: சாரண, சாரணீய இயக்க மாநிலத் தலைவர் அறிவுறுத்தல்

மாணவர்களிடம் மறைந்துள்ள ஆளுமைகளை வெளிக்கொணர வேண்டும் என்று சாரண, சாரணீய ஆசிரியர்களுக்கு சாரண, சாரணீய இயக்க மாநிலத் தலைவர் பி.மணி அறிவுரை வழங்கினார்.

மாணவர்களிடம் மறைந்துள்ள ஆளுமைகளை வெளிக்கொணர வேண்டும் என்று சாரண, சாரணீய ஆசிரியர்களுக்கு சாரண, சாரணீய இயக்க மாநிலத் தலைவர் பி.மணி அறிவுரை வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்ட பாரத சாரண, சாரணீய இயக்கம் சார்பில், பள்ளி ஆசிரியர்களுக்கான அடிப்படை சாரண ஆசிரியர் 10 நாள் பயிற்சி முகாம் திருவண்ணாமலையில் நடைபெற்று வருகிறது. இதில், திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 250-க்கும் மேற்பட்ட சாரண, சாரணீய ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்த முகாமை பள்ளிக் கல்வித் துறையின் ஓய்வு பெற்ற இயக்குநரும், பாரத சாரண, சாரணீய இயக்கத்தின் மாநிலத் தலைவருமான மணி, மாநில பயிற்சி ஆணையர் தர்ம.ராஜேந்திரன் ஆகியோர் வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும், உலக சமாதானத்தை வலியுறுத்தும் வகையில், வெண் புறாக்களை அவர்கள் பறக்க விட்டனர். இதைத் தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்குக்கு சாரண, சாரணீய இயக்க திருவண்ணாமலை மாவட்டத் தலைவர் வி.பவுன்குமார் தலைமை வகித்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் முன்னிலை வகித்தார்.
சாரண, சாரணீய ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கி மாநிலத் தலைவர் பி.மணி பேசியதாவது:
சாரண, சாரணீய ஆசிரியர்கள் இந்தப் பயிற்சியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். விஞ்ஞான யுகத்தில் உங்கள் மாணவர்களை மதிப்பெண்கள் பெறும் இயந்திரமாக மட்டும் பார்க்காமல், அவர்களிடம் மறைந்துள்ள ஆளுமைகளை வெளிக்கொணர வேண்டும்.
ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை தூண்டிவிடும் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட வேண்டும். இதன் மூலம் மாணவர்களை தேசிய அளவிலான பயிற்சியில் பங்கு பெறச் செய்து குடியரசுத் தலைவர் விருது பெற வைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில், பள்ளித் துணை ஆய்வாளர் குமார், சாரண, சாரணீய மாவட்டச் செயலர் பியூலா கரோலின், ஆணையர்கள் ஜோதிலட்சுமி, சீனிவாசவரதன், முன்னாள் ஆணையர் ஆறுமுகம், பள்ளி நிர்வாகி கலைவாணி, அம்ருல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com