சாலை செப்பனிடும் பணியை தடுத்து நிறுத்திய பாஜகவினர்: தரமற்ற முறையில் நடைபெறுவதாகப் புகார்

வந்தவாசி சன்னதி தெருவில் சாலையை செப்பனிடும் பணிகள் தரமற்று நடைபெறுவதாக புகார் தெரிவித்த பாஜகவினர், அந்தப் பணிகளை ஞாயிற்றுக்கிழமை தடுத்து நிறுத்தினர்.

வந்தவாசி சன்னதி தெருவில் சாலையை செப்பனிடும் பணிகள் தரமற்று நடைபெறுவதாக புகார் தெரிவித்த பாஜகவினர், அந்தப் பணிகளை ஞாயிற்றுக்கிழமை தடுத்து நிறுத்தினர்.
வந்தவாசி நகராட்சி சார்பில் 3-ஆவது குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவதற்காக சன்னதி தெரு உள்ளிட்ட நகரின் பல தெருக்களில் பள்ளம் தோண்டப்பட்டு, பிரதான குடிநீர் குழாய்கள் புதைக்கப்பட்டன. இதன் பின்னர், இந்தச் சாலைகளை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் பயனில்லாமல் இருந்துவந்தது.
இந்த நிலையில், சன்னதி தெருவில் குழாய்கள் புதைக்கப்பட்டதால் சேதமடைந்து பள்ளமான தார்ச்சாலையை சிமென்ட் கலவை மூலம் செப்பனிடும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது. பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, அங்கு வந்த நகரச் செயலர் குருலிங்கம் தலைமையிலான பாஜகவினர், பணிகள் தரமற்று நடப்பதாக புகார் தெரிவித்து, அந்தப் பணிகளை தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து பாஜகவினர் கூறியதாவது:
இந்தப் பணிகள் ரூ.3 லட்சம் செலவில் நடைபெறுகிறது. ஒப்பந்தத்தின்படி, சுமார் ஒரு அடி ஆழம் பள்ளம் தோண்டி பெரிய ஜல்லிக் கலவை நிரப்பி, பின்னர் அதன் மீது சிறு ஜல்லிக் கலவை போட வேண்டும். இதற்கு ஆற்று மணலை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆனால், சுமார் 2 இன்ச் அளவுக்கு மட்டுமே பெயருக்கு ஒரு பள்ளம் தோண்டி செப்பனிடுகின்றனர். ஆற்று மணலுக்கு பதில் தரமற்ற ஜல்லிமாவை பயன்படுத்துகின்றனர்.
வந்தவாசியில் உள்ள ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோயில், ஸ்ரீரங்கநாத பெருமாள் கோயில், ஸ்ரீஅங்காளம்மன் கோயில் ஆகிய கோயில்களின் தேரோட்டம் இந்த தெரு வழியாக நடைபெறும். மேலும், இந்தத் தெருவில் பல்வேறு வங்கிகள், பள்ளிகள் உள்ளன. பொதுமக்கள், மாணவர்கள் பெரிதும் பயன்படுத்தும் இந்தச் சாலையை தரமான முறையில் செப்பனிட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, தரமற்ற முறையில் செப்பனிடப்பட்டதை பெயர்த்து எடுத்து, தரமான முறையில் சாலையை செப்பனிட வேண்டும் என்றனர். இதைத் தொடர்ந்து, சாலை செப்பனிடும் பணியை நகராட்சி அதிகாரிகள் நிறுத்தினர். மேலும், சாலை தரமாக செப்பனிடப்படும் என்று அவர்கள் உறுதி அளித்ததை அடுத்து, பாஜகவினர் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com