பாசனக் கால்வாய் மீது பாதை அமைத்து மணல் கடத்தல்: பொதுப் பணித் துறை நடவடிக்கை எடுக்குமா?

செய்யாறு அருகே தண்டரை அணைக்கப்பட்டு பாசனக் கால்வாயை மறித்து, அதன் மீது பாதை அமைத்து லாரிகளில் ஆற்று மணல், களிப்பு மண் கடத்தப்பட்டு வருவதைத் தடுக்க பொதுப் பணித் துறை, காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எட

செய்யாறு அருகே தண்டரை அணைக்கப்பட்டு பாசனக் கால்வாயை மறித்து, அதன் மீது பாதை அமைத்து லாரிகளில் ஆற்று மணல், களிப்பு மண் கடத்தப்பட்டு வருவதைத் தடுக்க பொதுப் பணித் துறை, காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பாயும் செய்யாறு ஆறு மூலம் கிடைக்கும் தணணீரை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக் கொள்வதற்காக தண்டரை கிராமத்தில் கடந்த 1975-இல் சுமார் ரூ. ஒரு கோடியில் தண்டரை அணைக்கட்டு, பாசனக் கால்வாய்கள் கட்டப்பட்டன.
இந்தப் பகுதியில் இருந்து செய்யாறு ஆறு கிளை நதியாக பிரிந்து பல கிராமங்களில் உள்ள ஏரிகளில் நீரை நிரப்பி, பின்னர் பாசனக் கால்வாய்கள் வழியாக கடைசியாக மாமண்டூர் ஏரிக்கு சென்றடைகிறது.
சுமார் 22 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மாமண்டூர் ஏரிக்குச் செல்லும் தண்டரை பாசனக் கால்வாய் மிகவும் சேதமடைந்த நிலையில் இருந்ததால், கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் முன்னாள் அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் முயற்சியில் உலக வங்கி நிதியுதவியுடன், தமிழ்நாடு நீர்வள, நிலவள திட்டத்தில் தண்டரை அணைக்கட்டு சீரமைப்புப் பணிகள் சுமார் ரூ.7.15 கோடியிலும், அணைக்கட்டில் இருந்து சுமார் 10.6 கி.மீ. தொலைவுக்கு கால்வாய் சீரமைப்புப் பணிகள் ரூ.14.84 கோடியிலும் மேற்கொள்ளப்பட்டன.
இவ்வாறு சீரமைக்கப்பட்டு தண்ணீர் செல்வதற்கு தயார் நிலையில் உள்ள தண்டரை அணைக்கட்டு பாசனக்கால்வாயை அருகாவூர் கிராமம் அருகே சேதப்படுத்தியும், கால்வாயின் குறுக்கே லாரி போன்ற பெரிய கனரக வாகனங்கள் செல்லும் அளவுக்கு பாசனக்கால்வாயை மறித்து வழிப்பாதை அமைத்தும் மர்ம நபர்கள் உரிய அனுமதியின்றி ஆற்று மணல், களிப்பு மண் ஆகியவற்றை இரவு பகலாக கடத்திச் செல்கின்றனர்.
எனவே, அருகாவூர் அருகே தண்டரை அணைக்கப்பட்டு பாசனக் கால்வாய் மீது மணல் கடத்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள வழிப்பாதையை அகற்றவும், பாசனக் கால்வாயை சீரமைக்கவும், மணல் கடத்தலைத் தடுக்கவும் பொதுப்பணித் துறை, காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com