2 வாங்கினால் 1 இலவசம்: கோ - ஆப் டெக்ஸ் சிறப்பு விற்பனை தொடக்கம்

திருவண்ணாமலை கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலையத்தில் 2 வாங்கினால் 1 இலவசம் என்ற திட்டத்தை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வியாழக்கிழமை தொடக்கி வைத்தார்.

திருவண்ணாமலை கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலையத்தில் 2 வாங்கினால் 1 இலவசம் என்ற திட்டத்தை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வியாழக்கிழமை தொடக்கி வைத்தார்.
திருவண்ணாமலை, திருமஞ்சன கோபுரத் தெருவில் பெளர்ணமி கோ - ஆப் டெக்ஸ் விற்பனை நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, 2 வாங்கினால் 1 இலவசம் என்ற திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு கோ - ஆப் டெக்ஸ் வேலூர் மண்டல மேலாளர் ப.சந்திரசேகரன் தலைமை வகித்தார்.
கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குநர் ச.செந்தில்குமார், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி மேலாளர் (காஞ்சிபுரம்) சு.காங்கேயவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெளர்ணமி கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளர் சு.ராஜேந்திரன் வரவேற்றார்.
மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு 2 வாங்கினால் 1 இலவசம் என்ற திட்டத்தைத் தொடக்கி வைத்தார். தொடர்ந்து, வாடிக்கையாளர்களுக்கு பட்டுப்புடவைகளை ஆட்சியர் விற்பனை செய்தார்.
ரூ.65 லட்சம் இலக்கு நிர்ணயம்: கடந்த 19-ஆம் தேதி முதல் இந்தத் திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்தத் திட்டத்துக்கென பிரத்தியேகமான துணி வகைகள் வரவழைக்கப்பட்டு, விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. பாரம்பரிய வடிவமைப்புகளில் பட்டுச் சேலைகள், மென்பட்டுச் சேலைகள், ஆர்கானிக் சேலைகள், குர்திஸ் ரகங்கள், சுடிதார் துணி வகைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், வேட்டிகள் உள்பட ஏராளமான ரகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை பௌர்ணமி கோ - ஆப் டெக்ஸ் விற்பனை நிலையத்தில் இந்தத் திட்டத்தின் விற்பனைக் குறியீடாக ரூ.65 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து விடுமுறை நாள்களிலும் விற்பனை உண்டு. ஒரே ஒரு துணி ரகம் வாங்கினாலும் 20 சதவீத தள்ளுபடி உண்டு.
இதுதவிர, கனவு நனவுத் திட்டம் என்ற சேமிப்புத் திட்டமும் அனைத்து கோ - ஆப் டெக்ஸ் விற்பனை நிலையங்களில் நடைமுறையில் உள்ளது. வாடிக்கையாளர்கள் ரூ.300, ரூ.500, ரூ.1,000 வீதம் ஏதாவது ஒரு திட்டத்தில் சேர்ந்து ஒன்பது மாதங்கள் பணம் செலுத்தினால் கோ-ஆப்டெக்ஸ் 10-ஆவது தவணையைச் செலுத்தும். வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பத்துக்கேற்ப 30 சதவீத தள்ளுபடி விலையில் துணி வகைகளை எடுத்துக் கொள்ளலாம் என்று கோ - ஆப் டெக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. விழாவில், கோ - ஆப் டெக்ஸ் விற்பனை நிலைய ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com