ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி வெள்ளியையொட்டி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களில் வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

ஆடி வெள்ளியையொட்டி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களில் வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
ஆரணி கோட்டை வேம்புலியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை ஆடிப் பெருவிழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமை விழாவையொட்டி, பிரம்மாண்ட புஷ்பப் பல்லக்கில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. புஷ்பப் பல்லக்கை தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தொடக்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் விழாக் குழுத் தலைவர் ஜி.வி.கஜேந்திரன், செய்யாறு எம்எல்ஏ தூசி கே.மோகன், வேலூர் எம்எல்ஏ கார்த்திகேயன், வழக்குரைஞர் க.சங்கர், நகர அதிமுக செயலர் அசோக்குமார், விழாக் குழு உறுப்பினர்கள் கொங்கராம்பட்டு சரவணன், செல்வராஜ், சுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இடையங்குளத்தூர்: சேத்துப்பட்டை அடுத்த இடையங்குளத்தூரில் அமைந்துள்ள பொன்னியம்மன் கோயிலில் 15-ஆம் ஆண்டு ஆடித் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, பொன்னியம்மன் கோயிலில் விநாயகர், துர்க்கையம்மன், கங்கையம்மன், பொன்னியம்மன் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகமும், 108 பால்குட அபிஷேகமும் நடைபெற்றன. தொடர்ந்து, அம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டது.
பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் பொன்னியம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வீதியுலா வந்த டிராக்டரில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக முதுகில் அலகு குத்திக்கொண்டு அந்தரத்தில் தொங்கியபடியும், டிராக்டரை இழுத்தபடியும் வீதியுலா வந்தனர்.
கோயில் வளாகத்தில் 50 அடி உயரத்தில் குழந்தையை தொட்டிலில் ஏந்தி பறந்தபடி வந்து பொன்னியம்மனுக்கு மாலை அணிவித்து பக்தர் நேர்த்திக்கடன் செலுத்தினார். ஏராளமான பெண்கள் அம்மனுக்கு ஊரணி பொங்கலிட்டு படையலிட்டனர். இரவு அம்மன் வீதி உலா, வாணவேடிக்கை, கரகாட்டம், நாடகம் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை இளைஞர்கள், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
வந்தவாசி: வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணா நகரில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் ஆடி முதல் வெள்ளி பூஜை நடைபெற்றது. இதையொட்டி, காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. அம்மன் வேம்பு விருட்ச மகா மாரியம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.
இரவு கோயில் வளாகத்தில் அம்மன் வீதியுலா, அன்னதானம் உள்ளிட்டவை நடைபெற்றன. விழாவில் கோயில் அறக்கட்டளைச் செயலர் ஆறு.இலட்சுமண சுவாமிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
போளூர்: இதேபோல, போளூரை அடுத்த படவேட்டில் அமைந்துள்ள ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் ஆடி முதல் வெள்ளியையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இரவு அன்ன வாகனத்தில் சரஸ்வதி அலங்காரத்தில் அம்மன் வீதியுலா வந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com