செங்கம் அருகே பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்த இருவர் கைது

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே கத்தியைக் காட்டி மிரட்டி பெண்ணிடம் 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற இருவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே கத்தியைக் காட்டி மிரட்டி பெண்ணிடம் 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற இருவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
செங்கத்தை அடுத்த அம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் மனைவி பூமாதேவி (34). இவர், வெள்ளிக்கிழமை மாலை அம்மாபாளையம் கிராமத்தில் இருந்து புதுப்பாளையத்துக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். முத்தனூர் வனப் பகுதியில் சென்றபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்கள் பூமாதேவியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்க தாலிச் சங்கிலியை பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து புதுப்பாளையம் போலீஸில் பூமாதேவி புகார் அளித்தார். இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க மேல்செங்கம் காவல் நிலைய ஆய்வாளர் பூபதி தலைமையில் தனிப்படை அமைத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பொன்னி உத்தரவிட்டார்.
இந்த நிலையில், செங்கத்தை அடுத்த புதூர் மாரியம்மன் கோயில் பகுதியில் புதுப்பாளையம் போலீஸார் சனிக்கிழமை மாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரை நிறுத்தி போலீஸார் விசாரித்தபோது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததாகத் தெரிகிறது. இதையடுத்து, அவர்கள் இருவரையும் புதுப்பாளையம் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
இதில், அவர்கள் இருவரும் காரப்பட்டு பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (27), உண்ணாமலைப்பாளையத்தைச் சேர்ந்த ராமசாமி (34) என்பதும், பூமாதேவியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி தாலிச் சங்கிலியை பறித்துச் சென்றவர்கள் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, அவர்களிடமிருந்த 3 பவுன் தங்க தாலிச் சங்கிலி, அவர்கள் வந்த இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸார், வழக்குப் பதிவு செய்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர். மேலும், இவர்கள் இருவரும் இதுபோன்று வேறு பகுதிகளில் ஏதேனும் சங்கிலி பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com