தமிழக கோயில்களின் வரலாறு புத்தகமாக வெளியிடப்படும்: அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன்

தமிழகக் கோயில்களின் வரலாறு சேகரிக்கப்பட்டு புத்தகமாகவும், இணையதளத்திலும் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்

தமிழகக் கோயில்களின் வரலாறு சேகரிக்கப்பட்டு புத்தகமாகவும், இணையதளத்திலும் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கூறினார்.
திருவண்ணாமலையில் தொல்லியல் கழகத்தின் 28-ஆவது ஆண்டு கருத்தரங்கம், ஆவணம் 29' இதழ் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றன. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் கழகமும், திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவமும் இணைந்து இந்த விழாவை 2 நாள்கள் நடத்துகின்றன. தொடக்க விழாவுக்கு தொல்லியல் கழக துணைத் தலைவர் செந்தீ நடராஜன் தலைமை வகித்தார். தொல்லியல் கழகச் செயலர் சு.ராசவேலு வரவேற்றார்.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கல்வெட்டியல், தொல்லியல் துறையின் ஓய்வு பெற்ற துறைத் தலைவர் எ.சுப்பராயலு, கருத்தரங்க நோக்கம் குறித்துப் பேசினார். தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு தொல்லியல் ஒளிப்படக் கண்காட்சி, அரும்பொருள் கண்காட்சிகளை திறந்து வைத்து, ஆவணம் 29' இதழை வெளியிட்டார். பின்னர், தொல்லியல் அறிஞர்களுக்கான விருதுகளை வழங்கி அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பேசியதாவது:
மதுரை கீழடி அகழ்வாராய்ச்சியில் பழம்பெரும் தகவல்கள் கிடைத்துள்ளன. தமிழர்கள் என்றால் வீரர்கள் என்ற தன்மைக்குச் சொந்தக்காரர்கள். இதுபோன்ற கருத்தரங்கங்கள் மூலம் பழங்காலத்தின் பெருமைகளை வெளிக்கொணர வேண்டும். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, தமிழகக் கோயில்களின் வரலாறு குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு புத்தகமாகவும், இணையதளத்திலும் வெளியிட இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்றார்.
பின்னர், புதிய நூல்களை வெளியிட்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் பேசியதாவது:
நாம் எல்லோரும் வெளிநாடுகளுக்குச் சென்று அங்குள்ள பழங்கால வரலாற்றுச் சின்னங்களைப் பார்க்கத் துடிக்கிறோம். ஆனால், நமது மாவட்டத்திலேயே ஏராளமான பழைமையான வரலாற்றுச் சின்னங்கள் உள்ளன.
குறிப்பாக, திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூர் பகுதியில் உள்ள ஏராளமான வரலாற்று நினைவுச் சின்னங்களை நாம் நேரில் சென்று பார்க்க வேண்டும். இது பற்றி குழந்தைகளுக்கு பெற்றோர்கள் தெரிவிக்க வேண்டும்.
திருவண்ணாமலையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்துக்கு இதைவிட சிறப்பு என்ன வேண்டும் என்றார்.
தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று வரைபடத்தை தமிழக தொல்லியல் துறை இயக்குநர் கே.நாகராஜன் வெளியிட்டார். மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் வலைதளம், குறுஞ்செயலியை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமியும், மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்கள் குறித்த புத்தகத்தை ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி த.பிச்சாண்டியும் வெளியிட்டனர்.
விருதுகள் அளிப்பு: விழாவில், ஒருங்கிணைந்த வட ஆற்காடு மாவட்டத்தைச் சேர்ந்த தொல்லியல் மற்றும் வரலாற்றுத் துறையில் சிறப்பாகப் பணிபுரிந்த
அறிஞர்கள் கு.வெங்கடாசலம், ர.பூங்குன்றன், மா.காந்தி,
சு.இராசவேலு, இல.தியாகராஜன், து.தயாளன், இரா.சேகர், ப.வெங்கடேசன் ஆகியோருக்கு பல்வேறு பெயர்களில் விருதுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, பிற்பகல் 1.15 மணி முதல் மாலை 6.30 மணி வரை பல்வேறு அமர்வுகளில் கருத்தரங்கங்கள் நடைபெற்றன.
இதில், செய்யாறு எம்எல்ஏ தூசி கே.மோகன், திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலர் ச.பாலமுருகன், வரலாற்று ஆய்வாளர்கள், கல்வியாளர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
2-ஆம் நாள் விழா: தொடர்ந்து, 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 22) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
ஏற்பாடுகளை தஞ்சாவூர் தொல்லியல் கழகமும், திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவமும் செய்து வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com