அனுமதியின்றி மலையை வெட்டி மண் கடத்தல்

ஆம்பூரில் அரசு அனுமதியின்றி மலையை வெட்டி முறைகேடாக மண் கடத்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

ஆம்பூரில் அரசு அனுமதியின்றி மலையை வெட்டி முறைகேடாக மண் கடத்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
அரசுக்குச் சொந்தமான ஏரி உள்ளிட்ட நீர்நிலைகள், சொந்த நிலம் உள்பட எப்பகுதியிலும் ஒருவர் மண்ணை வெட்டி வேறு இடத்துக்கு எடுத்துச் சென்று பயன்படுத்த வேண்டுமானால் வருவாய்த் துறையினரின் அனுமதி பெற வேண்டியது அவசியமாகும்.
தற்போது தங்களுடைய விளை நிலங்களை மேம்படுத்துவதற்காக ஏரிகளில் விவசாயிகள் மண் எடுத்துச் செல்ல வட்டாட்சியர் அலுவலகங்கள் மூலமாக மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி வருகிறது. அவ்வாறு அனுமதி பெறுபவர்களும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது.
விவசாயிகளின் பெயரில் மண் எடுக்க அனுமதி பெற்றுவிட்டு, அதனை வியாபார நோக்கில் விற்பனை செய்வதும் நடந்து வருகிறது. ஆனால் உண்மையான விவசாயி மண் எடுக்க அனுமதி கேட்கும்போது, வருவாய்த் துறையினர் கையூட்டு கேட்பதாகக் கூறப்படுகிறது. அதனால் விவசாயிகள் மண் எடுக்க தயங்கும் நிலை உள்ளது.
அதே நேரத்தில் சொந்த நிலங்களில் பலர் மண் எடுக்க வருவாய்த் துறையினரின் அனுமதி பெறுவதில்லை எனத் தெரிகிறது. செல்வாக்கு மிகுந்தவர்கள், முக்கியப் பிரமுகர்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் அனுமதி பெறாமலேயே முறைகேடாக மண் அள்ளிக் கடத்தலில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆம்பூரில் புதுமனை பகுதியான ஆயிஷாபீ நகரில் மலைப்பாங்கான பகுதி உள்ளது. அப்பகுதிக்கு பட்டா இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த பட்டா நிலத்தில் உள்ள மலையை வெட்டி 500-க்கும் மேற்பட்ட டிப்பர் லாரி லோடு மண் அள்ளி கடத்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. பட்டா நிலத்தில் மண் அள்ளி எடுத்துச் செல்ல வேண்டுமானாலும், அரசு விதிகளின்படி வருவாய்த் துறையின் அனுமதி பெற வேண்டியது அவசியமாகும். ஆனால் எவ்வித அனுமதியும் பெறாமல் மலையை வெட்டி மண் அள்ளிக் கடத்திச் சென்று, அந்த இடம் சமன்படுத்தப்பட்டு மனைப் பிரிவுகளாக மாற்றுவதற்கான பணிகள் நடந்து வருவதாககூறப்படுகிறது.
முறைகேடாக விற்பனை செய்யப்படும் டிகே பட்டாக்கள்?
நிலம் இல்லாத ஏழைகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் டிகே பட்டா எனப்படும் இலவச நிலப் பட்டா பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த நிலப் பட்டாவை வைத்து அந்த நிலத்தில் விவசாயம் மட்டுமே செய்ய வேண்டும். அதை மனைப்பிரிவுகளாக மாற்றக் கூடாது, மற்றவர்களுக்கு விற்பனையும் செய்யக் கூடாது என்ற விதி உள்ளது. ஆனால் ஆம்பூர் புதுமனைப் பகுதியில் உள்ள டிகே பட்டாக்கள் மனைப்பிரிவுகளாக மாற்றப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
ஆம்பூர் புதுமனை ஆயிஷாபீ நகரில் மலையை வெட்டி மண் கடத்தியது குறித்து கேட்டதற்கு, ஆம்பூர் வட்டாட்சியர் மீராபென் காந்தி கூறுகையில், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com