ஆம்பூரில் ஒரே வீட்டில் இருவருக்கு டெங்கு அறிகுறி: அரசு மருத்துவமனையில் அனுமதி

ஆம்பூரில் ஒரே வீட்டில் இருவருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டதால், ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

ஆம்பூரில் ஒரே வீட்டில் இருவருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டதால், ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
ஆம்பூர் வாத்திமனை பகுதி குபா நகர் முதல் தெருவில் வசித்து வருபவர் ரபீக் அஹ்மத். இவரது மகன் முஹம்மத் உசாமா (17). பிளஸ்-2 முடித்து விட்டு உயர் கல்வியில் சேர உள்ளார். இவருக்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் பாதிப்பு இருந்து வந்தது.
8-ஆம் வகுப்பு பயிலும் இவரது சகோதரர் உஃபாஸ் ஆமித்துக்கும் (14) காய்ச்சல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, இருவரையும் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை சேர்த்தனர்.
அவர்களின் ரத்தத்தை பரிசோதனை செய்ததில், இருவருக்கும் டெங்கு அறிகுறி இருக்க வாய்ப்புள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ரபீக் அஹ்மத்தின் மகள் மர்தியா ஹுரைராவுக்கும் (10) டெங்கு அறிகுறி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், அவருடைய ரத்த மாதிரியும் சேகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரபீக் அஹ்மத் கூறுகையில், 'குபா நகரில் கழிவுநீர் தேங்கி, வீடுகளுக்குள் புகுந்துவிடுகிறது. இதுகுறித்து நகராட்சிக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆம்பூர் பர்ணகார தெரு, இந்திராநகர் ராகவேந்திரா கோயில் தெரு பகுதிகளிலும் கழிவுநீர் தேங்கி, பலருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
தற்போது, டெங்கு நோய் பரவி வருவதால், மாவட்ட சுகாதார அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
ஆம்பூர் நகராட்சி துப்புரவு அலுவலர் நெடுமாறன் கூறுகையில், ஆம்பூரில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலை பெறுகிறோம்.
பின்னர், அவர்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று துப்புரவுப் பணி, கொசு ஒழிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். 83 பேர் கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தினமும் குறிப்பிட்ட வார்டுகள் தேர்வு செய்யப்பட்டு, மேற்கண்ட பணிகள் நடைபெற்று வருகின்றன' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com