ஆம்பூர் அரசு மருத்துவமனையில் மூவர் குழு விசாரணை

ஆம்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கொண்ட குழுவினர் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினர்.
ஆம்பூர் அரசு மருத்துவமனையில் விசாரணை நடத்திய மூவர் குழுவினர்.
ஆம்பூர் அரசு மருத்துவமனையில் விசாரணை நடத்திய மூவர் குழுவினர்.

ஆம்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கொண்ட குழுவினர் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினர்.
ஆம்பூர் அரசு மருத்துவமனையில் 18 மருத்துவர்கள் இருக்க வேண்டிய பணியிடத்தில் வெறும் 4 மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். இதனால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 13-ஆம் தேதி ஆம்பூர் அருகே நடந்த விபத்தில் காயமடைந்த சென்னையைச் சேர்ந்த ராஜ்குமார் (65), சந்தானம் (84) ஆகிய இருவரும், இருதய நோய் பாதிப்பால் ராள்ளகொத்தூர் காலனியைச் சேர்ந்த 8-ஆம் வகுப்பு மாணவி வைஷ்ணவியும் (13) சிகிச்கைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் பணி நேரத்தில் சுமார் 2 மணி நேரம் வரை எந்த மருத்துவர்களும் இல்லாததால் ராஜ்குமார், வைஷ்ணவி ஆகிய இருவருக்கும் இறந்தனர்.
இதனால், ஆத்திரமடைந்த இந்து மக்கள் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மருத்துவமனை நுழைவு வாயில் கேட்டை பூட்டி போராட்டம் நடத்தினர். விசாரணை நடத்த வந்த மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் சாந்தியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து ஆம்பூர் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலராக இருந்த மருத்துவர் ஷர்மிளா அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். மருத்துவர் கென்னடி மருத்துவ அலுவலராக திங்கள்கிழமை பொறுப்பேற்றார். சம்பவம் நடந்த ஞாயிற்றுக்கிழமை மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் சாந்தி முதல்கட்ட விசாரணை நடத்தினார்.
மேலும் விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழுவை மருத்துவப் பணிகள் இயக்குநரகம் நியமித்துள்ளது. அதனடிப்படையில் மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் சாந்தி, வாணியம்பாடி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் உஷா ஞானசேகரன், சோளிங்கர் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் பாரதி ஆகியோர் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை வருகை தந்தனர்.
காலை சுமார் 11 மணிக்கு விசாரணை தொடங்கியது. அனைத்து பணியாளர்களிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினர். அவர்களிடமிருந்து தனித்தனியாக விளக்கம் கேட்டுப் பெற்றனர்.
இதுகுறித்து இணை இயக்குநர் (பொறுப்பு) மருத்துவர் சாந்தி கூறியதாவது:
அனைத்து பணியாளர்களிடமும் விசாரணை நடத்திய பிறகு விசாரணை அறிக்கையை சென்னையில் உள்ள மருத்துவப் பணிகள் இயக்குநருக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் அடிப்படையில் மருத்துவப் பணிகள் இயக்குநர் நடவடிக்கை எடுப்பார் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com