தங்கத்தில் கிறிஸ்துமஸ் மரம்:  நகைத் தொழிலாளி அபாரம்

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, தங்கத்தில் மிகச்சிறிய கிறிஸ்துமஸ் மரத்தை நகைத் தொழிலாளி உருவாக்கியுள்ளார்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, தங்கத்தில் மிகச்சிறிய கிறிஸ்துமஸ் மரத்தை நகைத் தொழிலாளி உருவாக்கியுள்ளார்.
ஆம்பூரைச் சேர்ந்தவர் தங்க நகை தயாரிக்கும் தொழிலாளி சி.எஸ். தேவன் (52). இவர், ஆலங்காயம் அருகே மிட்டூர் இந்தியன் வங்கி கிளையில் தங்க நகை மதிப்பீட்டாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் தங்கத்தில் மிகச்சிறிய பொருள்களை செய்யும் ஆர்வமுடையவர்.
தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, மிகச்சிறிய அளவில் கிறிஸ்துமஸ் மரத்தை தங்கத்தில் உருவாக்கியுள்ளார். 5 கிராம் 250 மில்லி அளவு தங்கத்தில் சுமார் 4 செ.மீ. உயரத்தில் 3 நாள்கள் உழைப்பில் சுமார் ரூ. 20 ஆயிரம் செலவில் இதை உருவாக்கியுள்ளார். கிறிஸ்துமஸ் மரத்தின் இலை மற்றும் காம்புகள் சுமார் 1 செ.மீ. நீளத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. இதையறிந்த ஆம்பூர் பகுதி மக்கள் அந்த மரத்தைப் பார்த்துவிட்டு செல்கின்றனர்.
இவர் ஏற்கெனவே கடந்த 2014-ஆம் ஆண்டு குடியரசு தினத்தையொட்டி  இந்திய வரைபடத்தை உருவாக்கியிருந்தார். 1.550 கிராம் எடை தங்கத்தில் 5 செ.மீ. அகலம், 5 செ.மீ. உயரத்தில் இந்திய வரைபடத்தை 2 நாள்கள் உழைப்பில் உருவாக்கியிருந்தார். அனைத்து மாநிலங்களையும் மிகச்சரியாக அதில் பிரித்து காண்பித்திருந்தார். இதனுடைய மதிப்பு ரூ. 5 ஆயிரமாகும்.
2013-ஆம் ஆண்டு காந்தி ஜயந்தியையொட்டி,  தங்கத்தில் மிகச்சிறிய அளவில் கை ராட்டையை உருவாக்கினார். 
 3 கிராம் எடை தங்கத்தில் உருவாக்கிய ராட்டையின் கைப்பிடியைப் பிடித்து சுற்றினால் சக்கரம் சுற்றுமளவுக்கு மிகத்துல்லியமாக உருவாக்கினார். இதனுடைய மதிப்பு ரூ. 8 ஆயிரமாகும்.  
80 மில்லி எடையில் கிரிக்கெட் உலகக் கோப்பை மாதிரியும், 160 மில்லி எடை தங்கத்தில் பெண்கள் அணியும் தங்க செருப்பின் மாதிரியும், 9 கிராம் தங்கத்தில் மிகவும் சிறிய தங்கச் சுவடியும், 240 மில்லி எடை கொண்ட தங்கக் கம்பிகளால் ஆன காந்தியின் உருவத்தையும், 300 மில்லி தங்கக் கம்பிகளால் ஆன எம்ஜிஆரின் உருவத்தையும் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.   
இதற்கு முன் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி தங்க கம்பிகளால் ஆன ஜெயலலிதாவின் உருவத்தை உருவாக்கினார். 1.250 கிராம் எடையுள்ள தங்கத்தில் 7 நாள்களில் 30 மணி நேரம் பணிபுரிந்து அதை உருவாக்கினார்.
தமிழக அரசின் பசுமை வீடு திட்டத்தின் கீழ் சூரிய சக்தி சாதனங்களுடன் கட்டப்படும் பசுமை வீடு, இஸ்ரோவால் உருவாக்கப்பட்ட பிஎஸ்எல்வி சி2 ராக்கெட்டின் சிறிய அளவு மாதிரி,  கடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றபோது வெள்ளியால் கிரிக்கெட் மைதானம் ஆகியவற்றை உருவாக்கினார். 
இவர் தங்கத்தால் மிகச்சிறிய அளவில் ஏதேனும் மாதிரியை செய்து சாதனைபுரிய வேண்டுமென்ற எண்ணத்தில் இதுபோன்று பல்வேறு மாதிரிகளை செய்து வருகிறார். கின்னஸ் சாதனை புரிய வேண்டும் என்பது தேவனின் விருப்பமாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com