நகராட்சி உருது பள்ளியை இடம் மாற்றக் கோரி மனு

அரக்கோணம் நகராட்சி உருது பள்ளியை இடம் மாற்றக்கோரி மசூதி தெரு வாழ் முஸ்லிம்கள் நகராட்சி ஆணையரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

அரக்கோணம் நகராட்சி உருது பள்ளியை இடம் மாற்றக்கோரி மசூதி தெரு வாழ் முஸ்லிம்கள் நகராட்சி ஆணையரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
அரக்கோணம் நகராட்சி உருது பள்ளி கடந்த 1956 முதல் 2000-ஆம் ஆண்டு வரை  மசூதி தெருவில் இயங்கி வந்தது.
இந்நிலையில் இப்பள்ளிக் கட்டடம் இடியும் நிலையில் இருந்ததால் பஜார் பகுதி நகராட்சி போலாட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்துக்கு மாற்றப்பட்டது. அங்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டதையடுத்து கிருபில்ஸ்பேட்டை நகராட்சி தொடக்கப் பள்ளி வளாகத்துக்கு மாற்றப்பட்டது. அங்கு ஒரே அறையில் இப்பள்ளி தற்போது செயல்பட்டு வருகிறது. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இருந்து இப்பள்ளி சுமார் ஒன்றரை கி.மீ. தொலைவுள்ள பகுதியில், அதுவும் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியில் மாற்றப்பட்டதாகக் கூறி, நகராட்சி உருது பள்ளிக்கு மாணவர்களை அனுப்புவதை பெற்றோர்கள் தவிர்த்தனர்.
இதனால் ஆண்டுக்கு சுமார் 200 பேர் வரை படித்து வந்த இப்பள்ளியில் தற்போது 10 மாணவர்கள் மட்டுமே படித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதனால் இப்பள்ளியை மீண்டும் மசூதி தெருவில் தற்போது அங்கன்வாடி மையம் செயல்படும் வளாகத்துக்கு மாற்ற வேண்டும் எனவும், அவ்வாறு மாற்றப்பட்டால் மேலும் அப்பள்ளியில் மாணவர்களைச் சேர்க்க தாங்கள் தயாராக உள்ளதாகவும் அரக்கோணத்தில் உள்ள முஸ்லிம்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் திங்கள்கிழமை அரக்கோணம் நகராட்சி ஆணையர் கமலகுமாரியை நேரில் சந்தித்த சையத் கைசர் அகமது பீர், சையத் வாரிஸ் பீர் உள்ளிட்ட முஸ்லிம் பிரதிநிதிகள் ஆணையரிடம் நகராட்சி உருது பள்ளியை அங்கன்வாடி மைய வளாகத்துக்கு இடம் மாற்றித்தரக்கோரி மனு அளித்தனர்.
இது தொடர்பாக அவர்களிடம் பேசிய நகராட்சி ஆணையர் கமலகுமாரி, கல்வித் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டபின், பள்ளி மாற்றப்படும் எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com