மக்கள் பணம் வீணடிப்பு: பெயரளவில் செயல்படும் திறந்தவெளி மேடைக் கடைகள்!

வேலூர் லாங்கு பஜாரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் சாலையோர சிறு வியாபாரிகளின் மறுவாழ்வுக்காக கட்டப்பட்

வேலூர் லாங்கு பஜாரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் சாலையோர சிறு வியாபாரிகளின் மறுவாழ்வுக்காக கட்டப்பட்ட கடைகளுக்கு வியாபாரிகள் செல்லாததால் மாநகராட்சிக்கு மாதத்துக்கு சுமார் ரூ. 7.5 லட்சம் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் மாநகராட்சி சார்பில் கடைகள் அப்புறப்படுத்துவதும், மறுநாளே கடைகள் அமைப்பது என்ற நிலை பல மாதங்களாக நீடித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
வேலூரின் முக்கிய பகுதியான லாங்கு பஜார், மண்டி வீதியில் மாநகராட்சி, தனியாருக்குச் சொந்தமாக ஏராளமான கடைகள் உள்ளன.
மேலும், நேதாஜி காய்கறி மார்க்கெட் இயங்கி வருவதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இங்கு வந்து செல்கின்றனர். இவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் 100-க்கும் மேற்பட்ட தரைக் கடைகள் சாலையின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ளன.
இதனால் இந்த சாலை எந்நேரமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது.
இதைத் தொடர்ந்து, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பதோடு, சாலையோர சிறு வியாபாரிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் நோக்கில் பழைய மீன் மார்க்கெட் பகுதியில் சுமார் ரூ. 10 லட்சம் செலவில் 252 திறந்தவெளி மேடைக் கடைகள் கட்டப்பட்டன. ஒவ்வொரு கடையும் 7.25-க்கு 4 அடி என்ற அளவில் அமைக்கப்பட்டிருக்கிறன. இதற்கு வாடகையாக நாளொன்றுக்கு ரூ. 100 நிர்ணயிக்கப்பட்டு, ஒவ்வொரு நாளும் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வியாபாரம் செய்ய கடைகள் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்தக் கடைகளில் வைத்து தான் வியாபாரம் செய்ய வேண்டும் எனவும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தரைக்கடை அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, சிறு வியாபாரிகள் திறந்தவெளி மேடைக் கடைகளில் வியாபாரம் செய்து வந்தனர்.
பழங்கள் உள்ளிட்டவை வாங்க பொதுமக்களின் வரத்து எதிர்பார்த்த அளவில் இல்லாதது, கடை வாடகை அதிகம் போன்ற காரணங்களை முன்வைத்து பெரும்பாலானவர்கள் மீண்டும் தரைக் கடைகள் மூலம் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்னும் சிலர் பழைய பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தரைக்கடைகள் அமைத்து வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர்.
இதனால் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு, போக்குவரத்து நெரிசல் குறித்து அவ்வப்போது அதிகாரிகளின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்படும் போது மட்டும், பெயரளவுக்கு ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற போர்வையில் கடைகள் அப்புறப்படுத்தப்படுகின்றன.
அதேபோல, ஜூலை 17-ஆம் தேதி இந்தப் பகுதியில் மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட நிலையில், மீண்டும் தரைக்கடைகள் அமைத்து வியாபாரம் நடைபெறுகிறது.
திறந்தவெளி மேடைக் கடைகளை முறையாகப் பயன்படுத்தப்பட்டால் மாநகராட்சிக்கு நாளொன்றுக்கு ரூ. 25,200-ம், மாதத்துக்கு சுமார் ரூ. 7.5 லட்சம் வருவாய் கிடைக்கும். ஆனால் மாநகராட்சி ஊழியர்கள் சிலர் வியாபாரிகளிடம் மறைமுகமாக வசூல் செய்து தரைக்கடை நடத்த அனுமதிப்பதால் தான் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதோடு, போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து நேதாஜி மார்க்கெட் வியாபாரிகள் கூறியதாவது:
மாநகராட்சிக்கு குத்தகை செலுத்தி வியாபாரம் செய்யும் எங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலான தரைக்கடைகளை அப்புறப்படுத்த மாநகராட்சி அதிகாரிகளிடம் அவ்வப்போது முறையிடுவதும், அதன்பேரில் ஆக்கிரமிப்பு அகற்றம் எனக் கூறி அவற்றை எடுக்க வைப்பதும், மறுநாளே கடைகள் போடுவதும் தொடர்கதையாக இருக்கிறது.
சிறு வியாபாரிகளுக்காக கட்டப்பட்ட பகுதியில் மட்டுமே வியாபாரம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு தவிர்க்கப்படுவதோடு, போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com