ஆட்சியர்கள் மாநாட்டை பருவமழைக்கு முன்பே நடத்தியிருக்க வேண்டும்: துரைமுருகன்

பருவமழை தொடங்குவதற்கு முன்பே ஆட்சியர்கள் மாநாட்டை அரசு நடத்தி, மழை வெள்ளப் பாதிப்பு குறித்து ஆலோசனை வழங்கியிருக்க வேண்டும் என

பருவமழை தொடங்குவதற்கு முன்பே ஆட்சியர்கள் மாநாட்டை அரசு நடத்தி, மழை வெள்ளப் பாதிப்பு குறித்து ஆலோசனை வழங்கியிருக்க வேண்டும் என எதிர்க்கட்சி துணைத் தலைவரும், திமுக முதன்மைச் செயலாளருமான துரைமுருகன் எம்எல்ஏ கூறினார்.
காட்பாடி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட விண்ணம்பள்ளி, வள்ளிமலை, பொன்னை அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் இலவச மடிக்கணினி வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவில் கலந்து கொண்ட பின்னர், செய்தியாளர்களிடம் துரைமுருகன் கூறியதாவது:
நடப்பாண்டு பருவமழை தொடங்குவதற்கு முன் ஆட்சியர்கள் மாநாட்டை அரசு நடத்தி மழை வெள்ளப் பாதிப்புகள் குறித்து ஆலோசனை நடத்தி முன்னெச்சரிக்கை  நடவடிக்கை  எடுத்திருக்க வேண்டும். அதேபோல சட்டம் ஒழுங்கை பாதுகாக்க எஸ்.பி.க்கள் மாநாடு நடத்திருக்க வேண்டும். இதைச் செய்யாமல் தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என்றார்.
முன்னதாக பள்ளி விழாவில் அவர் பேசியதாவது:
நான் ஆரம்பக் கல்வி முடித்து உயர்கல்வி படிக்க காலில் செருப்பு கூட இல்லாமல் பல மைல் தூரம்  நடந்து சென்று படித்தேன். அந்த நிலை எனது தொகுதி மக்களின் பிள்ளைகளுக்கு வந்துவிடக் கூடாது  எனக் கருதி தமிழகத்தில் எந்த எம்எல்ஏவும் செய்யாத வகையில் 24 ஆரம்பப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி, அதற்கான கட்டடங்களையும் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டிக் கொடுத்துள்ளேன்.
இத்தொகுதி மக்கள் என்னை 11 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுத்துள்ளனர். இது இந்திய அளவில் எந்த எம்எல்ஏவுக்கும் கிடைக்காத பெருமை.
தமிழக அரசின் சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மடிக்கணினி சாதாரணமானது அல்ல. அது கூர்மையான கத்தியைப் போன்றது. கத்தியைப் பயன்படுத்தி பழங்களையும் நறுக்கலாம், கையையும்  நறுக்கலாம். அதே போல் தான் மடிக்கணினியைப் பயன்படுத்தி உலக அறிவையும் மேம்படுத்திக் கொள்ளலாம் அல்லது உள்ளத்தையும் கெடுத்துக் கொள்ளலாம்.  எனவே, மாணவர்கள் மடிக்கணினியை நல்ல வழியில் பயன்படுத்தி உலக அளவில் சிறந்தவர்களாக வரவேண்டும் என்றார்.
விழாவுக்கு, மாவட்ட திமுக பொருளாளர் நரசிம்மன், காட்பாடி பகுதிச் செயலாளர் வன்னிய ராஜா, துரைசிங்காரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சோளிங்கர் மேற்கு ஒன்றியச் செயலாளர் கே.கருணாகரன் வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகள்
வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com