டெங்கு கொசுப்புழு: தனியார் மருத்துவமனைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

காட்பாடி பகுதியில் டெங்கு கொசுப் புழு உற்பத்திக்கு காரணமாக இருந்த தனியார் மருத்துவமனைக்கு புதன்கிழமை ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

காட்பாடி பகுதியில் டெங்கு கொசுப் புழு உற்பத்திக்கு காரணமாக இருந்த தனியார் மருத்துவமனைக்கு புதன்கிழமை ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மாவட்டம் முழுவதிலும் டெங்கு தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், காட்பாடி திருநகர் பகுதியில் ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தலைமையில் அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.  
அப்போது, விவேகானந்தர் தெருவில் உள்ள தனியார் விளம்பர நிறுவனத்தில் டெங்கு கொசுப் புழுக்கள் இருந்ததையடுத்து மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் மூலம் அதை அப்புறப்படுத்த உத்தரவிட்ட ஆட்சியர், அந்த நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார்.
தொடர்ந்து, காட்பாடி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சொந்தமான காலிமனையில் தேங்கியிருந்த மழைநீரில் டெங்கு கொசுப் புழுக்கள் இருந்ததால் மருத்துவமனைக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தார். சாலைகளில் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றி சுகாதாரமாக வைத்திருக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.
வருவாய் கோட்டாட்சியர் இ.செல்வராஜ், மாநகராட்சி ஆணையர் பெ.குபேந்திரன், நகர் நல அலுவலர் மணிவண்ணன், மாநகராட்சி உதவி ஆணையர் மதிவாணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அங்கன்வாடி மையங்களுக்கு கொசு வலை விநியோகம்: டெங்கு தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அங்கன்வாடி மையங்களுக்கு வரும் குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படாமல் இருக்க மாவட்டத்தில் இதுவரையில் 157 மையங்களுக்கு கொசு வலைகள் வழங்கப்பட்டுள்ளன. எஞ்சியவைகளுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com