அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கூடுதலாக 30 படுக்கை வசதிகள்: ஆட்சியர் தகவல்

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சைக்கு வருவோருக்காக கூடுதலாக 30 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன என, மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தெரிவித்தார்.

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சைக்கு வருவோருக்காக கூடுதலாக 30 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன என, மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தெரிவித்தார்.
அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் 24 மணி நேரம் செயல்படும் காய்ச்சலுக்கான ஆலோசனைகள் மற்றும் சிகிச்சை மையத்தை வியாழக்கிழமை நேரில் பார்வையிட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன், காய்ச்சல் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் 30 படுக்கைகள் கொண்ட காய்ச்சல் பிரிவில் 15 ஆண்கள், 7 பெண்கள் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, குழந்தைகள் பிரிவில் 5 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. காய்ச்சல் பாதிப்புடன் வருவோருக்கு படுக்கை வசதியுடன் சிகிச்சை அளிக்க கூடுதலாக 30 படுக்கையுடன் கூடிய அறை ஏற்படுத்தப்பட உள்ளது.
கடந்த மூன்று மாதங்களில் காய்ச்சல் பாதிப்புடன் வந்த 2,000 பெரியவர்கள், 690 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. மாவட்டத்தில் வேலூர் மாநகராட்சி, ஆம்பூர், குடியாத்தம், பேர்ணாம்பட்டு, திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உள்பட்ட செய்யாறு, செங்கத்தில் இருந்து காய்ச்சல் பாதிப்புடன் அதிகம் பேர் சிகிச்சைக்கு வருகின்றனர். காய்ச்சல் பாதிப்பால் அதிகமானவர்கள் வரும் பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த களப் பணியாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மாநகராட்சிப் பகுதியில் பிரதி வாரம் வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் தீவிர துப்புரவுப் பணி மேற்கொள்ள உத்தரவிடப்பட்டிருக்கிறது. மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் கொசு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது என்றார்.
தொடர்ந்து, இடையன்சாத்து அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கொசு ஒழிப்புத் தின விழாவில் டெங்கு நோய் தடுப்பு குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில், அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் லலிதா, துணை முதல்வர் திருமால் பாபு, மருத்துவத் துறை இணை இயக்குநர் சாந்தி, பொது சுகாதாரத் துறை துணை இயக்குநர் சுரேஷ், அரசு மருத்துவமனை குழந்தைகள் நலப் பிரிவு தலைவர் இ.தேரணிராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
டெங்கு விழிப்புணர்வு முகாம்: காட்பாடி ஒன்றியம், பள்ளிகுப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு முகாம்  தலைமை ஆசிரியர் பி.ஆர்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. சுகாதார மருத்துவர்கள், செவிலியர்கள் டெங்கு குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், ஆசிரியர்கள் எஸ்.சுரேஷ், என்.பாரதி, எஸ்.வசந்தி, மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com