வன்கொடுமைகளைத் தடுக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்: கைலாஷ் சத்யார்த்தி

குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி வேண்டுகோள் விடுத்தார்.

குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி வேண்டுகோள் விடுத்தார்.
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்தியார்த்தி, குழந்தை கடத்தல், வன்கொடுமை ஆகியவற்றுக்கு எதிராகவும், குழந்தைப் பாதுகாப்பு, உரிமைகளை வலியுறுத்தியும் கன்னியாகுமரி முதல் புது தில்லி வரை பாரத் யாத்திரை மேற்கொண்டுள்ளார்.
விஐடி பல்கலைக்கழத்துக்கு வியாழக்கிழமை வருகை தந்த கைலாஷ் சத்யார்த்திக்கு வேந்தர் ஜி.விசுவநாதன், துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இதைத் தொடர்ந்து கைலாஷ் சத்யார்த்தி பேசியதாவது:
தனியார் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் குழந்தைகள் வன்கொடுமை, காணாமல் போகும் நிலை அதிகம் இருக்கிறது. குழந்தைகள் வன்கொடுமை, பாலியல் பலாத்காரம் தொடர்பாக பதிவான 15,000 வழக்குகளில் 4 சதவீத வழக்குகளுக்கு மட்டுமே குற்றவாளிகளுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 6 சதவீத வழக்குகள் நிரூபிக்கப்படவில்லை. 90 சதவீத வழக்குகள் நிலுவையில் உள்ளன.
குழந்தைகள் பாதுகாப்பு, உரிமைகளை நிலைநாட்ட கன்னியாகுமரி முதல் புது தில்லி வரை பாரத் யாத்திரை மேற்கொண்டுள்ளோம். 22 மாநிலங்களில் 11 ஆயிரம் கி.மீ தூரம் இந்த யாத்திரை செல்கிறது. குடியரசுத் தலைவர், பிரதமர், மாநில முதல்வர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை, உரிமைகள், பாதுகாப்பை நிலை நாட்டும் வகையில் மாணவர்களுடன் இணைந்து செயலாற்றுவோம் என்றார்.
தொடர்ந்து, பாரத் யாத்திரை குழுவினருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் பேசியதாவது: நோபல் விருது பெற்ற கைலாஷ் சத்யார்த்தி மேற்கொண்டுள்ள இந்த யாத்திரை நாட்டிற்கு முக்கியமானதாகும். நாட்டில் குழந்தைத் திருமணம் உள்பட குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருவதற்கு கல்வி அறிவு இல்லாததே காரணம். நாட்டில் நான்கில் ஒரு பகுதியினர் மட்டுமே கல்வி படிக்கும் நிலை உள்ளது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவீதம் பேர் இளைஞர்களாவர். இளைஞர், குழந்தைகளுக்கு போதிய கல்வி அறிவு வழங்குவதன் மூலம் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க முடியும் என்றார்.
இதைத் தொடர்ந்து, கைலாஷ் சத்யார்த்தி பல்கலைக்கழகத்தினுள் மாணவ, மாணவியருடன் விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொண்டார்.
நிகழ்ச்சியில், விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம், துணைவேந்தர் ஆனந்த் ஏ.சாமுவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இணை துணைவேந்தர் எஸ்.நாராயணன் வரவேற்றார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நிஷாந்தினி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com