சந்தைப் போட்டியை எதிர்கொள்ளும் வகையில் புதிய திட்டம் அறிமுகம்: பிஎஸ்என்எல் அதிகாரி தகவல்

சந்தைப் போட்டியை எதிர்கொள்ளும் வகையில் நாளொன்றுக்கு ஒரு ஜிபி டேட்டா மற்றும் அனைத்து செல்லிடப்பேசிகளுக்கு இலவசமாக பேசும் வசதி அறிமுகப்பட்டிருப்பதாக பிஎஸ்என்எல் முதன்மை

சந்தைப் போட்டியை எதிர்கொள்ளும் வகையில் நாளொன்றுக்கு ஒரு ஜிபி டேட்டா மற்றும் அனைத்து செல்லிடப்பேசிகளுக்கு இலவசமாக பேசும் வசதி அறிமுகப்பட்டிருப்பதாக பிஎஸ்என்எல் முதன்மை பொது மேலாளர் கே.வெங்கட்ராமன் தெரிவித்தார்.
வேலூரில் உள்ள அலுவலகத்தில் பிஎஸ்என்எல் முதன்மை பொது மேலாளர் கே.வெங்கட்ராமன் சனிக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
போட்டி நிறைந்த சந்தையில் வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டங்கள், சலுகைகள் வழங்குவதில் பிஎஸ்என்எல் சிறப்பாக செயலாற்றி வருகிறது. அந்த வகையில், புதிதாக தரைவழி தொலைபேசி, பிராட்பேண்ட் வாங்குபவர்களுக்கு நிர்மாணக் கட்டணம் முற்றிலும் இலவசமாக்கப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் மாதாந்திர வாடகை அதிகம் என்ற காரணத்தினால் வெளியேறிய 7,500 வாடிக்கையாளர்கள் மற்றும் புதிய சந்தாதாரர்களை இழுக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு புதிய திட்டங்கள் மூலம் கடந்த இரண்டு மாதங்களில் 1,824 பேர் திரும்பி வந்துள்ளனர்.
பிளான் அசீம் திட்டம்: பிஎஸ்என்எல் தரைவழி தொலைபேசி எண் முக்கிய ஆவணமாக பயன்படுத்தப்படுகிறது. வேறு பகுதிக்கு பணியிட மாறுதல், சொந்த காரணங்களுக்காக இணைப்பை துண்டித்தவர்கள் மீண்டும் அதே எண்ணை பெறும் திட்டம் செப்டம்பர் மாதம் முதல் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இத்திட்டத்தில் சேருவோர் தரைவழி தொலைபேசியில் பேச முடியாது. மாறாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் தொலைபேசி எண்ணுக்கு வரும் அழைப்புகள் அவர்கள் வைத்துள்ள செல்லிடப்பேசிக்கு தகவல் அளிக்கப்படும். இத்திட்டத்தில் பிஎஸ்என்எல் செல்லிடப்பேசி வைத்திருப்போருக்கு ஆண்டுக் கட்டணமாக ரூ. 99-ம், மற்ற செல்லிடப்பேசி வைத்திருப்போர் ரூ. 199-ம் வசூலிக்கப்படும்.
மாவட்டத்தில், லத்தேரி, அம்முண்டி, கணியம்பாடி, கொணவட்டம் ஆகிய தொலைபேசி நிலையங்களில் உயர் தொழில்நுட்ப வசதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர வேலூர் மெயின் தொலைபேசி நிலையத்தில் நடைபெற்று வரும் உயர் தொழில்நுட்ப வசதி ஒரு மாதத்துக்குள் நிறைவடையும். இதன்மூலம் செல்லிடப்பேசி வைத்திருப்போர் 10 அல்லது 15 பேர் சேர்ந்து குரூப்பை ஏற்படுத்தி பயன்பெற முடியும்.
மொபைல் திட்டங்கள்: சந்தையில் நிலவும் போட்டியை எதிர்கொள்ளும் நோக்கில் 90 நாள்கள் பயன்பெறும் வகையில் 429 ரூபாய் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் இணையும் வாடிக்கையாளர்களுக்கு நாள்தோறும் ஒரு ஜிபி டேட்டா இலவசமாக அளிக்கப்படுவதுடன், அனைத்து செல்லிடப்பேசிகளுக்கும் இலவசமாக பேசிக் கொள்ள முடியும்.
ஆதார் எண் இணைக்க சிறப்பு முகாம்: வேலூர் தொலைத் தொடர்பு மாவட்டத்தில் தற்போது 6 லட்சம் செல்லிடப்பேசி சந்தாதாரர்கள் உள்ளனர். இவர்களில் 50,000 பேர் மட்டுமே செல்லிடப்பேசி எண்ணுடன் ஆதார் நம்பரை இணைத்துள்ளனர். எஞ்சியவர்களை இணைக்கும் வகையில் அனைத்து வாடிக்கையாளர் சேவை மையங்கள் திங்கள்கிழமை (செப்டம்பர் 18) முதல் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும்.
அத்துடன், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை வாடிக்கையாளர் சேவை மையங்களில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 17) சிறப்பு முகாம் நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை 10 மணி முதல் மாலை 5 வரை செயல்படும் முகாமில் செல்லிடப்பேசி எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com