திருப்பதியில் பக்தர்கள் வசதிக்காக ரூ. 79 கோடியில் பல்வேறு திட்டங்கள்: தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் தகவல்

திருமலை திருப்பதியில் பக்தர்கள் வசதிக்காக ரூ. 79 கோடியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக திருமலை திருப்பதி

திருமலை திருப்பதியில் பக்தர்கள் வசதிக்காக ரூ. 79 கோடியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் புட்டா சுதாகர் யாதவ் தெரிவித்தார்.
வேலூரில் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர் சங்க ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
இந்த விழாவில் பங்கேற்க வந்த புட்டா சுதாகர் யாதவ், முன்னதாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதில் பக்தர்கள் வசதிக்காக ரூ. 79 கோடியில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக, கல்யாண கட்டா தங்கும் விடுதி ரூ. 1.5 கோடியில் புனரமைக்கப்பட உள்ளது. முடிகாணிக்கை அளிக்க வரும் முதியவர்களின் நலனுக்காகவும், சிறப்பு வசதிகள் செய்யவும், அவர்கள் மலைப் பகுதியில் எளிமையாகச் சென்று வர கூடுதலாக பேட்டரி கார்கள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், திருப்பதி வெங்கடேஷ பெருமாள் கோயில் நுழைவு வாயிலான வைகுந்த துவாரத்தை நவீனமயமாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருப்பதியின் முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதலு, திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளார். அவரது குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை. 1952-ஆம் ஆண்டில் ஆவணப்படுத்தப்பட்ட அனைத்து நகைகளும் தற்போதும் இருப்பில் உள்ளன. அவை குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதற்குரிய ஆதாரங்களை அளிக்கவும், நேரடியாக பேச்சு நடத்தவும் தயாராக உள்ளோம். 
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதிக்கு வெளியில் செயல்படுத்தப்படும் ஒரே பள்ளியாக வேலூர் ஸ்ரீவெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளி திகழ்கிறது. இந்த பள்ளி 1876-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்பள்ளி தேவஸ்தான போர்டு நிர்வாகத்தின் கீழ் 1952-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. கேரள ஆளுநராக இருந்த பி.ராமசந்திரன், மனோன்மணியம் சுந்தரனார்  பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த சண்முகசுந்தரம் உள்ளிட்ட நாடு முழுவதும் உயர் பதவிகளில் உள்ள பலரும் இப்பள்ளியில் படித்துள்ளனர் என்றார் அவர்.
முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் விஸ்வநாதன் வரவேற்றார். விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன், மனோன்மணியம் சுந்தரனார்  பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
நிகழ்ச்சிக்கு, முன்னதாக ஸ்ரீபுரம் நாராயணி பீட தங்கக்கோயிலில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் புட்டா சுதாகர் யாதவ், லக்ஷ்மி நாராயணி சுவாமியை தரிசனம் செய்துவிட்டு சுவர்ண லஷ்மி அபிஷேகம் செய்தார். அவருக்கு நாராயணி பீடத்தின் பீடாதிபதி சக்தி அம்மா ஆசி வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com