இளம்பெண் சாவு: காவல் நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்

காதல் திருமணம் செய்து கொண்ட இளம்பெண் 3 மாதங்களில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

காதல் திருமணம் செய்து கொண்ட இளம்பெண் 3 மாதங்களில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் லத்தேரி காவல் நிலையத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
காட்பாடி அருகே மெட்டுக்குளம் காலனி முத்துமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி ரகுவின் 2-ஆவது மகள் ரம்யா (19). இவரும், லத்தேரி அருகே உள்ள செஞ்சி அருந்ததியர் காலனியைச் சேர்ந்த அஜீத்குமாரும் காதலித்து வந்தனர். இருவரும் கடந்த 3 மாதங்களுக்கு முன் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து இருவரும் அஜீத்குமார் வீட்டில் வசித்து வந்தனர். 
இந்நிலையில், ரம்யா திங்கள்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோர் வீட்டிற்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் பனமடங்கி போலீஸார் அங்கு சென்று ரம்யாவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
இதனிடையே, ரம்யாவின் சாவில் மர்மம் உள்ளதாகவும், இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி அவரது பெற்றோர் பனமடங்கி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், புகாரைப் பெற போலீஸார் மறுத்ததுடன், அலட்சியமாக செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது. 
இதனால், ஆத்திரமடைந்த ரம்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் லத்தேரி காவல் நிலையத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.  போலீஸார் சமாதானம் செய்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை முடித்து ரம்யாவின் சடலம் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், சடலத்தை வாங்க மறுத்து தொடர்ந்து அவரது பெற்றோர், உறவினர்கள் போராட்டம் நடத்தினர். பின்னர், மீண்டும் போலீஸார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டத்தைக் கைவிட்டு சடலத்தைப் பெற்றுச் சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com