திருவள்ளுவர் பல்கலை.யில் ரூ.116.68 கோடி முறைகேடு: தொழிலாளர் சங்கம் குற்றச்சாட்டு

வேலூரில் அமைந்துள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் வரவு-செலவுக் கணக்கு தணிக்கையில் 2002-03 முதல் 2015-16-ஆம் ஆண்டு வரை

வேலூரில் அமைந்துள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் வரவு-செலவுக் கணக்கு தணிக்கையில் 2002-03 முதல் 2015-16-ஆம் ஆண்டு வரை ரூ.116 கோடியே 67 லட்சத்து 51 ஆயிரத்து 478 கணக்கில் வராமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
தவிர,  தணிக்கை அறிக்கையில் கூறப்படாத வகையில், மேலும் ரூ. 100 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ள பல்கலைக்கழக தொழிலாளர் சங்கம் (டிபிஇயூ), இதுதொடர்பாக தமிழக ஆளுநர், அரசுத்துறை முதன்மைச் செயலர்களுக்கும் புகார் மனு அனுப்பியுள்ளது.
 வேலூர் மாவட்டம், சேர்க்காட்டிலுள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகம் கடந்த 2002-03-ஆம் கல்வியாண்டில் தொடங்கப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் 128 உறுப்புக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் சுமார் 1.80 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்களாக சுசீலா திருமாறன், எல்.கண்ணன், ஜோதிமுருகன், குணசேகரன் ஆகியோர் பதவி வகித்துள்ளனர். தொடர்ந்து, தற்போதைய துணைவேந்தராக க.முருகன் உள்ளார். 
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் அனைத்து வரவு-செலவுக் கணக்குகளை உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறையின் வேலூர் மாவட்ட துணை இயக்குநர் அலுவலகத்தில் தணிக்கை செய்யப் படுகிறது. இதன்படி, பல்கலைக்கழகத்தின் 2002-03-ஆம் கல்வியாண்டு முதல் 2015-16-ஆம் ஆண்டு வரையிலான வரவு-செலவுக் கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டதில், இதுவரை ரூ. 116 கோடியே 67 லட்சத்து 51 ஆயிரத்து 478 தொகை கணக்கில் வராமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
இத்தொகை கொடுக்கப்பட்ட முன்பணம் நேர்செய்யாதது, தவறான செலவுகள், ஒப்பந்தப்புள்ளி கோராமல் கொள்முதல் செய்தது, நேரடியாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள மிகை ஊதியம், ஓய்வுபெற்ற, பணியில் உள்ளவர்களிடம் இருந்து வசூலிக்கப் படாமல் உள்ள முன்பணம், வசூலிக்கப்படாத கல்விக்கடன், பயன்பாடற்ற கருவிகள், உபகரணங்கள் வாங்கியது, பதிவேடு இல்லாத கல்லூரிகளின் இணைப்புக் கட்டணம், நீதிமன்ற வழக்குச் செலவு, மாணவர்களின் ஒப்புகையின்றி அளிக்கப்பட்டுள்ள கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அடையாளம் காட்டப்பட்டுள்ளன.
 ஒவ்வொரு ஆண்டு தணிக்கைக்குப் பிறகும் கணக்கில் வராத தொகைகள் குறித்த தணிக்கை அறிக்கையை, வேலூர் மாவட்ட உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறையின் துணை இயக்குநர் அலுவலகத்திலிருந்து உயர்கல்வித் துறை செயலர், நிதித்துறை செயலர், பல்கலைக்கழக மானியக்குழு செயலர், உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறை இயக்குநர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டு வந்துள்ளது. எனினும், இந்த முறைகேடுகள் தொடர்பாக இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என திருவள்ளுவர் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கம் (டிபிஇயூ) குற்றம் சாட்டியுள்ளது. 
 இந்த முறைகேடுகள் குறித்து அச்சங்கம் சார்பில் தமிழக ஆளுநரும், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான பன்வாரிலால் புரோஹித், உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர், நிதித்துறை முதன்மைச் செயலர், சட்டத் துறை செயலர் ஆகியோருக்கும் கடந்த புதன்கிழமை (மே 16) புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, சங்கத்தின் கௌரவத் தலைவர் ஐ.இளங்கோவன், வெள்ளிக்கிழமை வேலூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறையின் தணிக்கையில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் இதுவரை ரூ. 116 கோடியே 67 லட்சத்து 51 ஆயிரத்து 478 அளவுக்கு தொகை கணக்கில் வரவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதுதவிர, பழைய விடைத்தாள்களை ஒப்பந்தப்பள்ளி கோராமல் விற்றது, இணைப்புக் கல்லூரிகளில் புதிய பாடப் பிரிவுகள் தொடக்கம், கௌர விரிவுரையாளர்கள் நியமனம் என தணிக்கை அறிக்கையில் கூறப்படாத வகையில் ரூ. 100 கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்றுள்ளது. 
 குறிப்பாக, 2011-12-ஆம் ஆண்டு 1,400 மாணவர்களுடன் தொடங்கப்பட்டு, 11 இளநிலை, 6 முதுநிலைப் பாடப் பிரிவுகளுடன் செயல்பட்டு வந்த தொலைநிலைக் கல்வி மையம், பல்கலைக்கழக நல்கைக் குழுவின் தொலைநிலைக் கல்விக்குழுவில் அனுமதி பெறாததால் மூன்றாண்டுகளில் மூடப்பட்டது. எனினும், யோகா பாடப்பிரிவு மட்டும் ஒரு தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு தொடர்ந்து மாணவர் சேர்க்கையை நடத்தி, லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்டு வருகிறது.
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் இத்தகைய பெரும் மோசடிகள் குறித்து தமிழக ஆளுநர், உயர்கல்வித் துறை அமைச்சர் உள்பட பல்வேறு துறை அதிகாரிகளுக்கு சங்கம் சார்பில், கடந்த 16 ஆண்டுகளில் 40-க்கும் மேற்பட்ட மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. எனினும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இறுதியாக கடந்த புதன்கிழமையும் விரிவான மனு அனுப்பப்பட்டுள்ளது. 
இதன்மீதும் நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் ஜூன் மாதம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர திட்டமிட்டுள்ளோம். அதில், திருவள்ளுவர் பல்கலைக்கழக பதிவாளராக ஐஏஎஸ் அதிகாரியை நியமித்து பல்கலைக்கழக வரவு-செலவு கணக்குகள் மீது விரிவான ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்த உள்ளோம் என்றார் அவர்.
 அப்போது, சங்க நிர்வாகிகள் நாகரத்தினம், ஆண்டனி பாஸ்கர், பிரபாகரன், ஆசிஃப், செல்வக்குமார் உள்பட பேராசிரியர்கள் பலர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com