காவலர்களின் மனஅழுத்தத்தைப் போக்க நிறைவாழ்வு பயிற்சி தொடக்கம்

காவலர்களுக்கான மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் நிறைவாழ்வு பயிற்சி வேலூரில்

காவலர்களுக்கான மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் நிறைவாழ்வு பயிற்சி வேலூரில் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. இந்தப் பயிற்சியை வேலூர் சரக டிஐஜி வி.வனிதா தொடங்கி வைத்தார்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள காவலர்களுக்கு ஏற்படும் மன உளைச்சல், மன அழுத்தத்தைப் போக்க உளவியல் வல்லுநர்கள் மூலம் காவலர்களுக்கு நிறைவாழ்வு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சியின் தொடக்க விழா வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. வேலூர் சரக டிஐஜி வனிதா தலைமை வகித்து பயிற்சியைத் தொடங்கி வைத்தார். வேலூர் எஸ்.பி. (பொறுப்பு) எஸ்.பி. சிபிசக்ரவர்த்தி முன்னிலை வகித்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் டிஐஜி வனிதா கூறியதாவது:
தமிழக முதல்வர், காவல் துறை இயக்குநர் ஆகியோர் அறிவுறுத்தல்படி ஓராண்டுக்கு அனைத்து மாவட்டத்திலும் உள்ள அனைத்து காவலர்களுக்கும் இந்த நிறைவாழ்வு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. வேலூர் மாவட்டத்தில் கல்லூரிப் பேராசிரியர்கள் உள்ளிட்ட மொத்தம் 18 பேர் இந்தப் பயிற்சியை அளிக்க உள்ளனர். இவர்கள் 6 குழுக்களாகப் பிரிந்து வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாள்களில் 30 முதல் 40 காவலர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள். 
இந்தப் பயிற்சியின் போது காவலர்களின் மனஅழுத்தத்தை அறிந்து அதற்கேற்ற பயிற்சிகள், ஆலோசனைகளை காவலர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் அளிக்கப்படும். இந்தப் பயிற்சியின் நோக்கம் காவலர்களின் மனத்தில் மன அழுத்தமின்றி பணி செய்யக்கூடிய சூழலை உருவாக்குவதே ஆகும் என்றார் அவர்.
தொடர்ந்து, காவலர்கள் 35 பேருக்கு நிறைவாழ்வு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. ஊரீசு கல்லூரிப் பாதுகாப்பு, போர்த்திறனியல் துறைத் தலைவர் திருமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com