திருவண்ணாமலை தீபத் திருவிழா: போக்குவரத்து நெரிசலைத் தடுக்க ஆன்லைன் பார்க்கிங் வசதி

திருவண்ணாமலையில் நடைபெறும் கார்த்திகை தீபம், பரணி தீபத் திருவிழாவின்போது ஏற்படும் போக்குவரத்து

திருவண்ணாமலையில் நடைபெறும் கார்த்திகை தீபம், பரணி தீபத் திருவிழாவின்போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க இந்த ஆண்டு புதிய முயற்சியாக ஆன்லைன் பார்க்கிங் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதாக வேலூர் சரக டிஐஜி வி.வனிதா, திருவண்ணாமலை எஸ்.பி. சிபி சக்கரவர்த்தி ஆகியோர் தெரிவித்தனர். 
இதுகுறித்து வேலூரில் செய்தியாளர்களிடம் அவர்கள் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா நபம்பர் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இவ்விழாவைக் காண வெளி மாவட்ட, மாநிலங்களில் இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவது வழக்கம். இதனால், திருவண்ணாமலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தடுக்க இந்த ஆண்டு புதிய முயற்சியாக ஆன்லைன் பார்க்கிங் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
வெளி மாவட்ட, மாநிலங்களில் இருந்து கார், வேன், தனியாக பேருந்துகளில் வருவோர் ‌w‌w‌w.‌t‌v‌m‌p‌o‌u‌r‌n​a‌m‌i.‌i‌n என்ற இணையதளம் மூலம் பார்க்கிங் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த முன்பதிவு நகலை வாகனத்தின் முன்பக்கத்தில் ஒட்டிவர வேண்டும். இந்த வசதியை பொது மக்கள் முழுவதுமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 
தீப திருவிழாவுக்காக கிரிவலப் பாதையைச் சுற்றி 6 இடங்களில் 780 கார்கள் நிறுத்தக்கூடிய அளவுக்கு பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, நகர் முழுவதும் மொத்தம் 77 இடங்களில் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. புதிதாக 7 பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 22 லட்சம் முதல் 25 லட்சம் பேர் வரை தீபத் திருவிழாவுக்கு வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. 
பரணி தீபத்தின் போதும், மகா தீபத்தின் போதும் திருவண்ணாமலை கோயிலின் உள்ளே கட்டாயமாக செல்லிடப்பேசிக்கு அனுமதி கிடையாது. கோயில் உள்பாதுகாப்புக்கு நிற்கும் போலீஸாருக்கும் செல்லிடப்பேசி கொண்டு செல்ல அனுமதி இல்லை. ஒருவேளை செல்லிடப்பேசி கொண்டு வந்தால் அதை வாங்கி வைத்து மீண்டும் வழங்க கூடிய வசதியும் கிடையாது. எனவே, பொதுமக்கள் தாங்களாக முன் வந்து செல்லிடப்பேசி கொண்டு வருவதைத் தவிர்க்க வேண்டும். செல்லிடப்பேசியுடன் வந்தால் கோயிலுக்குள் அனுமதி கிடையாது. 
கார்த்திகை தீபத் திருவிழாவுக்காக 265 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. குற்றச்செயல்களைத் தடுக்க 40 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டும் மலை ஏற முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் 2,500 பேருக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படும். மலை ஏற மொத்தம் 27 வழிகள் உள்ள நிலையில் கோபுரம் எதிரில் உள்ள ஒரு வழி மட்டுமே மலை ஏற அனுமதிக்கப்படும். மற்ற 26 இடங்களும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி தடை செய்யப்படும். இந்த இடங்களில் வனத்துறை, காவல் துறையினர் கூட்டாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com