720 விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு

விநாயகர் சதுர்த்தியையொட்டி, வேலூர் மாவட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த சிலைகள் சனிக்கிழமை விசர்ஜனம் செய்யப்பட்டன. முதல்


விநாயகர் சதுர்த்தியையொட்டி, வேலூர் மாவட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த சிலைகள் சனிக்கிழமை விசர்ஜனம் செய்யப்பட்டன. முதல் நாளான சனிக்கிழமை மட்டும் மாவட்டம் முழுவதும் 720 சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, வேலூர் மாவட்டம் முழுவதும் 1,556 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வழிபாடு செய்யப்பட்டன. இந்தச் சிலைகள் மூன்றாம் நாளான சனிக்கிழமை முதல் விசர்ஜனம் செய்யப்படுகின்றன. இதற்காக மாவட்டம் முழுவதும் 16 ஏரிகள் தேர்வு செய்து ஒதுக்கப்பட்டன. இந்த ஏரிகள் கடந்த சில தினங்களாக தூர்வாரப்பட்டு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது.
முதல் நாளான சனிக்கிழமை மாவட்டம் முழுவதும் 720 சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன. வேலூர், கொணவட்டத்தில் மட்டும் இந்து முன்னணி சார்பில் 44 சிலைகள் உள்பட மொத்தம் 85 சிலைகள் சத்துவாச்சாரி, கொணவட்டத்திலிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சதுப்பேரி ஏரியில் விசர்ஜனம் செய்யப்பட்டன. முன்னதாக, ஆட்சியர் அலுவலகம் அருகே தொடங்கிய இந்த விசர்ஜன ஊர்வலத்தை ஸ்ரீபுரம் தங்கக்கோயில் இயக்குநர் சுரேஷ்பாபு, நாராயணி மருத்துவமனை இயக்குநர் பாலாஜி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில், திருவலம் சாந்த சுவாமிகள், அப்பாஜி சுவாமிகள், பாஜக நிர்வாகி இளங்கோவன், இந்து முன்னணி கோட்டத் தலைவர் மகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த ஊர்வலம் காகிதப்பட்டறை, சைதாப்பேட்டை, மண்டித்தெரு, அண்ணா கலையரங்கம், கொணவட்டம் வழியாகச் சென்று சதுப்பேரி ஏரியில் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன. இந்த விசர்ஜன ஊர்வல பாதுகாப்புப் பணியில் எஸ்.பி. பிரவேஷ்குமார் தலைமையில் சுமார் 1,500 போலீஸார் ஈடுபட்டிருந்தனர்.
இதேபோல், மாவட்டத்தின் பிற பகுதிகளான ஊசூர் ஏரி, கருகம்புத்தூர் ஏரி, ராணிப்பேட்டையில் தண்டலம் ஏரி, சோளிங்கர் பெரிய ஏரி, புளியந்தாங்கல் ஏரி, ஆற்காடு ஏரி, வேப்பூர் ஏரி, அரக்கோணத்தில் மங்கம்மாபேட்டை ஏரி, மாவேறு ஏரி, குடியாத்தத்தில் நெல்லூர்பேட்டை ஏரி, ஆம்பூரில் பாலாறு, சான்றோர் குப்பம் ஏரி, வாணியம்பாடியில் பள்ளிப்பட்டு ஏரி, திருப்பத்தூரில் பொன்னேரி ஏரி, ஏலகிரி ஏரி ஆகியவற்றிலும் விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன.
இதுதொடர்பாக போலீஸார் கூறுகையில், ஊர்வலத்தில் அசம்பாவிதங்களைத் தவிர்க்க மூன்று கட்டங்களாக சிலைக் கரைப்பு ஊர்வலம் நடக்கிறது. முதல் கட்டமாக வேலூர், சத்துவாச்சாரி, கொணவட்டம், வாலாஜாபேட்டை, அரக்கோணம், குடியாத்தம், பேர்ணாம்பட்டு ஆகிய இடங்களிலும், 2-ஆம் கட்டமாக ஆம்பூர், ஆற்காடு ஆகிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமையும், வாணியம்பாடி, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமையும் விசர்ஜன ஊர்வலம் நடத்தப்படுகிறது. இந்த ஊர்வலத்தில் அசம்பாவிதங்களைத் தவிர்க்க 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com