விவசாய நிலங்களுக்குள் யானைகள் வராமல் தடுக்க முள்வேலிக் கம்பம்

தளி வனப் பகுதியில் முகாமிட்டுள்ள யானைகள் விவசாய நிலங்களுக்குள் வராமல் தடுக்க,

தளி வனப் பகுதியில் முகாமிட்டுள்ள யானைகள் விவசாய நிலங்களுக்குள் வராமல் தடுக்க, சிறப்பு திட்ட நிதியின் கீழ் 30 இடங்களில் இரும்பு முள்வேலிக் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வன அலுவலர் ராஜேந்திரன் தெரிவித்தார்.
 வனப் பகுதியில் இருந்து விவசாய நிலங்களுக்குள் யானைகள் வருவதைத் தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 30-க்கும் மேற்பட்ட செய்தியாளர்களை வனப் பகுதிக்குள் அழைத்துச் சென்று அவர் விளக்கினார்.
 கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், தளி, ஜவளகிரி, தேவர்பெட்டா போன்ற அடர்ந்த வனப் பகுதியில் வனத்துறை மூலம் நடைபெற்று வரும் பணிகளை அவர் விளக்கிக் கூறியது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூர், தேன்கனிக்கோட்டை வனப் பகுதியில் 150-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன.
 ஆண்டுதோறும் அக்டோபர் மாத இறுதியில் கர்நாடக மாநிலம், பன்னார்கட்டா வனப் பகுதியில் இருந்து தேன்கனிக்கோட்டை வனப் பகுதிக்கு யானைகள் வருவது வழக்கம். இந்த ஆண்டும் முதல்கட்டமாக 30-க்கும் மேற்பட்ட யானைகள் வந்துள்ளன. இந்த யானைகள் தளி அருகே தேவர்பெட்டா காட்டையொட்டி முகாமிட்டுள்ளன.
 தளி வனப் பகுதியில் யானைகள் வராமல் தடுக்க சிறப்பு திட்ட நிதியில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு முள்வேலிக் கம்பம் அமைக்கப்பட்டுள்ளதை செய்தியாளர்களுக்கு காண்பித்தார். ஒசூர் வனக் கோட்டத்தில் யானைகள் வரும் பாதை என கண்டறியப்பட்ட 30 இடங்களில் இந்த முள்வேலிக் கம்பங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
 தளி வனப்பகுதியையொட்டிய கிராம மக்கள், யானைகளின் நடமாட்டம் குறித்து தகவல் தெரிவிக்க, வனத்துறை சார்பில் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
 மேலும், யானைகள் வனப் பகுதிக்குள் இருந்து கிராமத்துக்குள் வராமல் தடுக்க அகழிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதைத் தவிர, கிராம மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு கிராமத்திலும் 5 முதல் 10 நபர்கள் கொண்ட குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
 இதையும் மீறி காப்புக் காட்டில் இருந்து யானைகள் வெளியேறினால், பொதுமக்கள் உயிரையும், உடமைகளையும் பாதுகாத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வனப்பகுதியையொட்டி கிராம மக்கள் விழிப்புடன் இருக்க ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். அப்போது, ஒசூர் வனச்சரகர் சுகுமார் மற்றும் வன ஊழியர்கள் உடன் இருந்தனர்.
ராகி பயிரை விரும்பும் பெண் யானைகள்
 தற்போது வந்துள்ள 30 யானைகளில் 7 குட்டி யானைகள் உள்ளன. இந்த குட்டி யானைகளுக்கு பால் கொடுக்க, பெண் யானைகள் ராகி பயிரை விரும்பி உண்கின்றன. ராகி பயிர் உண்பதன் மூலம் 15 லிட்டர் முதல் 20 லிட்டர் வரை பால் சுரக்கிறதாம். இதனால், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் ராகி அதிகளவில் பயிர் செய்யப்பட்டுள்ள ஒசூர் வனக் கோட்டத்தை சுற்றியுள்ள விவசாய நிலங்களுக்கு வருவதை யானைகள் வழக்கமாக கொண்டுள்ளன. யானைகள் வருவதைத் தடுக்க ஒசூர் வனக்கோட்டத்தில் 275 கி.மீ. தொலைவுக்கு அகழி வெட்டப்பட்டுள்ளது. மேலும், 250 கி.மீ. தொலைவுக்கு சோலார் மின்வேளி அமைக்கப்பட்டுள்ளது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com