கே.ஆர்.பி. அணை உபரி நீரை பாம்பாறு அணைக்கு விட கோரிக்கை

கே.ஆர்.பி. அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை, ஊத்தங்கரை பாம்பாறு அணைக்கு விட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கே.ஆர்.பி. அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை, ஊத்தங்கரை பாம்பாறு அணைக்கு விட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த பாம்பாறு அணை 42 அடி கொள்ளளவு கொண்டதாகும். இந்த அணை கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி ஆகிய இரு மாவட்டங்களில் 4 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி கொண்டது. இந்த அணையானது மாரம்பட்டி, கானம்பட்டி, மூன்றம்பட்டி, பாவக்கல், கொட்டுகாரம்பட்டி, நல்லவன்பட்டி, சிங்காரப்பேட்டை, நாயக்கனூர், நாப்பிராம்பட்டி, வண்டிக்காரன்கொட்டாய், புதூர் என 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு விவசாயமும், குடிநீர் ஆதாரமுமாய் விளங்குகிறது.
 கே.ஆர்.பி. அணை நிரம்பி அதன் உபரி நீர் அனைத்தும் தென்பெண்ணை ஆற்றங்கரை கால்வாய்களில் சென்று சாத்தனூர் வழியாக வீணாக கடலில் கலக்கிறது. கே.ஆர்.பி. அணை உபரி நீரை பாரூர் பெரிய ஏரி, பெனுகொண்டாபுரம் ஏரி வழியாக பாம்பாறு அணைக்கு கொண்டுவந்தால், இப்பகுதியில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். மேலும் இப் பகுதி குடிநீர் தட்டுப்பாடு நீங்கும். விவசாயிகள் பாசன நீர் பெற்று தங்கள் விவசாய ஆதாரங்களை பெருக்கிக்கொள்வர்.
 ஊத்தங்கரை, மிட்டப்பள்ளி, சிங்காரப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக இந்த அணை விளங்குகிறது. கடும் வறட்சி காரணமாக தற்போது பாம்பாறு அணை வறண்டுள்ளது. அணை கட்டிய 34 ஆண்டுகளில் அணை முழுமையாக வறண்டது இந்த ஆண்டே. அணை வறண்டதால் அதை நம்பியுள்ள விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு கால்நடைகளுக்கும் குடிநீர் ஆதாரம் இன்றி தவித்து வந்தனர்.
 இந்நிலையில் வெள்ளிக்கிழமை கே.ஆர்.பி. அணை நிரம்பியதால் உபரி நீர் வெளியேறும் தென்பெண்ணை ஆற்றங்கரையோரப் பகுதியில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 பாம்பாறு அணை வறட்சி குறித்து இப்பகுதி விவசாயிகள் கூறும்போது, 1991முதல் கிருஷ்ணகிரி அணையின் உபரிநீர் பாரூர் பெரிய ஏரியின் மூலமாக பெனுகொன்டாபுரம் ஏரி வழியாக ஊத்தங்கரை பாம்பாறு அணைக்கு வந்ததாக கூறுகின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பாம்பாறு அணைக்கு தண்ணீர் விடுவதில்லை. பாம்பாறு அணைக்கு தண்ணீர் விடக்கோரி பாம்பாறு அணை பாதுகாப்பு இயக்கம், விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் என பல்வேறு போராட்டங்களை நடத்தியும் தண்ணீர் திறந்து விடவில்லை.
 நீர்வரத்து காலங்களில் முன்னுரிமை அடிப்படையில் பாம்பாறு அணைக்கு தண்ணீர் திறந்து விட மாவட்ட ஆட்சியர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com