ஒசூரில் பி.எஸ்.என்.எல். சேவையில் அதிகரிக்கும் குறைபாடு

ஒசூரில் பி.எஸ்.என்.எல். தொலைபேசி சேவையில் குறைகள் அதிகரித்து வருவதால் வாடிக்கையாளர்கள் விரத்தி அடைந்துள்ளனர்.

ஒசூரில் பி.எஸ்.என்.எல். தொலைபேசி சேவையில் குறைகள் அதிகரித்து வருவதால் வாடிக்கையாளர்கள் விரத்தி அடைந்துள்ளனர்.
 பி.எஸ்.என்.எல். தருமபுரி கோட்டத்திலேயே அதிக வருவாய் ஈட்டித் தருவது தொழில் நகரமான ஒசூரில்தான். இங்கு தொழிற்சாலைகள் அதிகம் உள்ளதால் தரை வழிச் சேவை, அகண்ட அலைவரிசை, செல்லிடப்பேசி சேவை, செல்லிடப்பேசியில் இணைய வழி சேவை என பல்வேறு வழிகளில் அதிக வருவாய் ஈட்டித் தரும் ஒசூரில் பி.எஸ்.என்.எல். சேவையில் குறைபாடுகள் அதிக அளவில் உள்ளதால் வாடிக்கையாளர்கள் தனியார் தொலைபேசி சேவையை நாடிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
 ஒசூரில் பல்லாயிரம் தரைவழி தொலைபேசி இணைப்புகள் இருந்தாலும், உள்ளாட்சித்துறையினர் மற்றும் குடிநீர் வடிவால் வாரியத்தினால் தோண்டப்படும் குழிகளால் பல இடங்களில் தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
 குறிப்பாக ஒசூர் ரெயின்போ கார்டன், வசந்த் நகர், ஜேஜே நகர் போன்ற பகுதிகளில் தரைவழித் தொலைபேசிகள் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு பல நாள்கள் ஆகியும், புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். தரைவழி தொலைபேசிகள் இயங்காததால் அகண்ட அலைவரிசையும் செயல் இழந்து உள்ளது.
 மேலும் அதே பகுதிகளில் செல்லிடப்பேசி சேவையிலும் குறைபாடுகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஒருவர் மற்றொருவருடன் பேசும் போது அடிக்கடி துண்டிக்கப்படுவது வழக்கமாக இருக்கிறது. பலமுறை துண்டிக்கப்பட்டால் மீண்டும் மீண்டும் தொடர்பு கொண்டு பேச வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் தனியார் தொலைபேசி நிறுவனங்களை நாடிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஒசூர் கோட்ட பொறியாளர் நாராயணசாமி கூறியது: இங்குள்ள குறைபாடுகளை சரிசெய்ய தருமபுரி அலுவலகத்தில் இருந்து ஆட்கள் வரவேண்டும். அவர்கள் வந்த பிறகுதான் சரி செய்ய முடியும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com