ஒசூரில் கனரக தொழில்சாலைகள் கொண்டு வர வேண்டும்: ஜி.கே.மணி

ஒசூரில் கனரக தொழில்சாலைகளை கொண்டு வரவேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார்.

ஒசூரில் கனரக தொழில்சாலைகளை கொண்டு வரவேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார்.
 ஒசூரில் தொழில் வளர்ச்சிக்கான ஆலோசனைக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை கலந்துகொண்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ஒசூர் ஒரு தொழில் நகரம். ஒசூரில் சிப்காட் ஆரம்பிக்கும்போது கனரக தொழில்சாலைகளான அசோக் லேலண்ட், டி.வி.எஸ். போன்ற பெரிய தொழில்சாலைகள் தொடங்கப்பட்டன. அந்தப் பெரிய தொழில்சாலைகளுக்கு உதிரி பாகங்கள் உற்பத்தி செய்து சப்ளை செய்ய 100-க்கும் மேற்பட்ட சிறு, குறுந்தொழில்சாலைகள் தொடங்கப்பட்டன. ஆனால், அதன் பிறகு ஒசூரில் பெரிய தொழில்சாலைகள் தொடங்கப்படவே இல்லை. இதன் காரணமாக சிறு தொழில்சாலைகளுக்கு இடையே ஏற்பட்ட தொழில் போட்டியில் பல நூறு சிறிய தொழில்சாலைகளை மூடப்பட்டன.
 தமிழகத்தில் தொழில் முதலீட்டாளர்கள் தொழில் தொடங்க தயாராக இருந்தாலும் தமிழக அரசின் ஒத்துழைப்பும், ஆதரவும் பெரிய அளவில் இல்லாததால், கர்நாடக, ஆந்திர, மகாராஷ்டிர மாநிலத்துக்கு தொழில் முதலீட்டாளர்கள் வெளியேறி வருகின்றனர்.
 ஒசூரில் கனரக தொழில்சாலைகள் தொடங்க வேண்டும். இதனால் இங்குள்ள சிறு மற்றும் குறுந்தொழில்சாலைகள் வளர்ச்சியடைவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அதற்கு தமிழக அரசு ஒரு குழுவை அமைக்க வேண்டும். தொழில் தொடங்க வங்கியில் பெறப்படும் கடனுக்கான வட்டியையும், வரியையும் குறைக்க வேண்டும். உற்பத்திக்கு பிறகு சந்தைப் படுத்த அரசு போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 தொழில் நகரமான ஒசூரிலிருந்து கிருஷ்ணகிரி, ஜோலார்ப்பேட்டை வழியாக ரயில்பாதை அமைத்து ரயில் போக்குவரத்தை தொடக்கினால் ஒட்டுமொத்த தொழில்துறை வளர்ச்சி பெறும். மேலும், ஒசூரில் விமானச் சேவையை உடனடியாக தொடங்க வேண்டும். இதனால் தொழில் வளர்ச்சி பெறும் என்றார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர் கலந்துகொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com