ஆசை வார்த்தையை நம்பி பலியாகாதீர்கள்- முதல்வர் சொன்ன குட்டிக் கதை

கிருஷ்ணகிரியில் சனிக்கிழமை நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறிய குட்டிக் கதை:

கிருஷ்ணகிரியில் சனிக்கிழமை நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறிய குட்டிக் கதை:
ஒரு காட்டில் ஓநாய் ஒன்று தனக்கு எடுபிடியாக இருக்கும் நரியை அழைத்துக் கொண்டு உடல் நிலை சரியில்லாததால் எனக்கு உணவு தேட முடியாது. எனவே, உணவு கொண்டு வா என்றது.
கிராமத்தின் எல்லைக்கு சென்ற நரி, அங்கு மறைந்திருந்த நாட்டு எருதை சந்தித்து, மாமா, வணக்கம், ஏன் இங்கு மறைந்திருக்கீறிர்கள் எனக் கேட்டது. அதற்கு எருது, எனது எஜமான் என்னை சுமையை வண்டியில் ஏற்றி ஓட்டுகிறான். எனது ஜோடி எருது அங்கு இருக்கிறது. என்னை காணாமல் அவன் திண்டாடட்டும் என்று ஒளிந்திருக்கிறேன் என்றது எருது.
ஊரெல்லாம் தேடி இங்கே வந்து உன்னை கண்டுபிடிச்சு இழுத்துட்டு போய் விடுவான் என்றது நரி. அப்படியானால் என்னால் தப்பிக்கவே முடியாதா என்று எருது நரியிடம் கேட்டது.
ஏன் முடியாது? என்னோடு காட்டுக்கு வா, நிறைய புல் வளர்ந்து கிடக்கிறது. வேலை செய்யாமல் தீனி சாப்பிட்டு புஷ்டியாக இருக்கலாம் என்று எருதுக்கு ஆசை காட்டியது நரி. காட்டில் விலங்குகள் இருக்கும். அவை என்னை கடித்து குதறிவிடும். அங்கு வந்தால் எனக்கு ஆபத்தில்லையா? என்றது எருது. காட்டு விலங்குகளை பாத்திருக்கியா என்றது நரி. அதற்கு, இந்த கிராமத்தை விட்டு வெளியே சென்றது இல்லை என்றது எருது. உன்னைபோல எருதுகள்தான் காட்டில் திமுதிமு என வளர்ந்திருக்கின்றன. உன்னைப் பார்த்தால் தான் காட்டு விலங்குகளுக்கு பயம் என்றது நரி. நரியின் பேச்சை நம்பிய எருது காட்டுக்குச் சென்றது.
நரி ஓநாயிடம் ஜாடை காட்டியது. ஓநாய் எருது மீது பாய்ந்து குதறியது. எருது எழமுடியாத நிலையில், நரியிடம் நான் குளித்துவிட்டு விருந்து உண்கிறேன் என கூறிவிட்டு, ஓநாய் அருகில் உள்ள ஆற்றுக்கு குளிக்கச் சென்றது.
ஒநாய் வந்துவிட்டால் எருதின் மூளை கிடைக்காது என்பதால், எருதின் மூளையை நரி தின்றுவிட்டது. நீராடி வந்த ஓநாய், ஏன் மூளையை தின்றுவிட்டாய் என நரியிடம் கேட்டது. மூளை இருந்தால், இந்த எருது என்னை நம்பி காட்டுக்குள் வந்திருக்குமா? அதனால், எருதுக்கு மூளை இருக்கிறதா என்று பார்த்தேன். நான் நினைத்தபடி எருதுக்கு மூளை இல்லை என்றது நரி. அதை ஓநாயும் நம்பியது. நரியும், ஏப்பம் விட்டபடியே தான் நினைத்தது நடந்துவிட்டது என்ற திருப்தியில் அங்கிருந்து நகர்ந்தது.
இப்படிதான் பலர் அந்த ஓநாய் மற்றும் நரியைப் போல ஆசை வார்த்தைகளைக் காட்டி அழைத்து வரச் சொல்லி அழிந்து விடுகிறார்கள். எனவே, யாரும் ஆசை வார்த்தை ஜாலங்களை நம்பி பலியாகி விடாதீர்கள். உங்களுக்கு தகுந்த இடம் இதுதான். நம்பிக்கையோடு இருங்கள். நீங்கள் எண்ணியது அத்தனையும் நிறைவேறும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

ரூ.11.44 ஆயிரம் கோடியில் நலத் திட்டங்கள்
ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் இதுவரை மாநிலம் முழுவதும் ரூ.8 ஆயிரத்து 312 கோடியே 99 லட்சம் மதிப்பிலான 33,589 திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தும், ரூ.3 ஆயிரத்து 130 கோடியே 96 லட்சம் மதிப்பிலான 6,555 பணிகளுக்கு அடிக்கல் நாட்டி உள்ளேன்.
மொத்தம் ரூ. 11 ஆயிரத்து 443 கோடியே 95 லட்சம் மதிப்பில் 40,144 பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com