எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் 16 வளர்ச்சித் திட்டங்கள் அறிவிப்பு

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கான 16 அறிவிப்புகளை வெளியிட்டார்.

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கான 16 அறிவிப்புகளை வெளியிட்டார்.
கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கான 16 திட்டங்களை அறிவித்தார். அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ஆலியாளம் பகுதியில் கட்டப்பட்டுள்ள அணையின் வலதுபுறக் கால்வாய் நீட்டிக்கப்பட்டு ஒசூர், தேன்கனிக்கோட்டை வட்டங்களில் உள்ள 12 ஏரிகள், தருமபுரி மாவட்டம், தூள்செட்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்படும்.
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அரசம்பட்டி மற்றும் பெண்டரஅள்ளி ஆகிய இடங்களில் தடுப்பணைகள் கட்டப்படும். கொடியாளம் அணைக்கட்டிலிருந்து 25 ஏரிகளுக்கு மின்விசை பம்புகள் மூலம் நீரேற்றம் செய்ய ஆய்வு மேற்கொள்ளப்படும்.
தாமோதரஅள்ளி ஊராட்சியில் உள்ள சந்தனூர் ஏரியிலிருந்து பாப்பாரப்பட்டி ஊராட்சியில் உள்ள கொட்டாவூர் ஏரிக்கும், கும்பாரஅள்ளி ஊராட்சியில் உள்ள பச்சனம்பட்டி ஏரியிலிருந்து பட்டகரஅள்ளி ஏரிக்கு புதிய நீர்வரத்து கால்வாய்கள் அமைக்கக ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
கிருஷ்ணகிரியை தலைமையிடமாகக் கொண்டு பொதுப்பணித் துறைக்கு கட்டடம் மற்றும் பராமரிப்புக்கு என புதிய கட்டட கோட்டம் உருவாக்கப்படும். சூளகிரிக்கு புறவழிச்சாலை அமைக்கப்படும். தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே பாத்தக்கோட்டா சாலையில் ரூ.3.65 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டப்படும்.
ஒசூர் நகருக்கு வெளிவட்ட சாலை அமைப்பதற்காக ரூ.145 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்கான நிதி ஒதுக்கப்படும். ஒசூர் - ஆனைக்கல் ரயில் நிலையங்களுக்கு இடையே தளி சாலையில் ரயில்வே மேம்பாலம் கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
தளி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நாட்றாம்பாளையத்தில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும். ஒசூர் அருகே வர்த்தக ஊக்குவிப்பு மையம் செயல்படுத்தப்படும். ஒசூர் நகராட்சியை ஒட்டியுள்ள அச்செட்டிபள்ளி, பேகேப்பள்ளி, சென்னசந்திரம், கொத்தகொண்டப்பள்ளி, நல்லூர், ஒன்னல்வாடி, தொரப்பள்ளி, அகராஹாரம், பேரண்டப்பள்ளி ஆகிய 8 ஊராட்சிகளைச் சேர்த்து ஓசூர் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.
இதேபோல கிருஷ்ணகிரி நகராட்சிக்கு அருகே உள்ள அகசிப்பள்ளி, வெங்கடாபுரம், தேவசமுத்திரம், காட்டிநாயனப்பள்ளி, கல்லுகுறுக்கி, பெத்தனப்பள்ளி, பையனப்பள்ளி ஆகிய 8 ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைத்து சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் நீரை ஆதாரமாகக் கொண்டு ரூ.60 கோடி மதிப்பில் புதிய குடிநீர் திட்டம் மேற்கொள்ளஆய்வு மேற்கொள்ளப்படும். ஒசூர் விளையாட்டு அரங்கில் கூடுதலாக கூடைப்பந்து ஆடுகளம், இறகுப்பந்து உள் விளையாட்டு அரங்கம், நடைபாடை, உடல்பயிற்சி கூடம் அமைக்கப்படும் என அறிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com