விவசாய நிலத்தில் உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு: ஆய்வு செய்ய வந்த கோட்டாட்சியரை விவசாயிகள் முற்றுகை

பண்ணந்தூர் அருகே விவசாய நிலங்களில் பவர் கிரேட் உயர் மின் கோபுரம் அமைய உள்ள இடத்தைப் பார்வையிட வந்த கிருஷ்ணகிரி வருவாய்க் கோட்டாட்சியரை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

பண்ணந்தூர் அருகே விவசாய நிலங்களில் பவர் கிரேட் உயர் மின் கோபுரம் அமைய உள்ள இடத்தைப் பார்வையிட வந்த கிருஷ்ணகிரி வருவாய்க் கோட்டாட்சியரை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
போச்சம்பள்ளியை அடுத்த பண்ணந்தூர் அருகே பெரிய கூத்தம்பட்டி, சின்ன கூத்தம்பட்டி, செட்டி கொள்ளை, தலையன்கொட்டாய், தேவிரஹள்ளி, குடிமேனஹள்ளி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் 800-கேவி திறன்கொண்ட 25-க்கும் மேற்பட்ட உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளன.
இதற்கு விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு இருந்ததால் செவ்வாய்க்கிழமை காலை போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதிக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது தாமோதரஹள்ளி, குடிமேன ஹள்ளி, செட்டிகொட்டாய், தலையன் கொட்டாய் கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரம் அமைக்க விடமாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், புதன்கிழமை காலை கிருஷ்ணகிரி வருவாய்க் கோட்டாட்சியர் என். சரவணன், போச்சம்பள்ளி வட்டாட்சியர் கோபிநாத், பவர் கிரேட் நிறுவன அதிகாரிகள் பெரிய கூத்தம்பட்டியில் உயர் மின் கோபுரம் அமைய உள்ள நிலங்களை அளவீடு செய்து அறிக்கை தயார் செய்ய வந்தனர்.
தகவல் அறிந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் குடும்பத்துடன் கோட்டாட்சியர் உள்பட அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விவசாய நிலத்தில் ஒருபோதும் பவர் கிரேட் உயர் மின் கோபுரம் அமைக்க விடமாட்டோம். வேண்டுமென்றால் சாலையோரங்களில் கேபிள் ஒயர் அமைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினர்.
மேலும் மாவட்ட ஆட்சியரின் உத்தரவு இன்றி வரக் கூடாது என்றும், இதுகுறித்து ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம் என்று வருவாய்க் கோட்டாட்சியரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பிறகு பாரூர் காவல் ஆய்வாளர் கு. கபிலன், போச்சம்பள்ளி காவல் நிலைய உதவி ஆய்வாளர் கோவிந்தராசன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சு நடத்தினர்.
பிறகு வருவாய்க் கோட்டாட்சியர் இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்குத் தகவல் தெரிவிப்பதாகவும், ஆட்சேபனை இருப்பின் விவசாயிகள் மனு அளிக்கும்படியும் கூறியதன்பேரில் விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com