கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடும் வறட்சி: இழப்பீடு வழங்க கோரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சியால் மா மரங்கள் காயத் தொடங்கி உள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சியால் மா மரங்கள் காயத் தொடங்கி உள்ளன. இத்தகைய நிலையில், தற்போது பெய்யும் மழையைக் கொண்டு காயும் மரங்களை காக்கலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் முக்கியத் தொழில் விவசாயம். மாவட்டத்தில் பரவலாக காய்கறிகள், பல வகையான மலர்கள், நெல், தானியங்கள், மா போன்ற பல வகையான பழ வகைகளை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். 
இருப்பினும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் மா பயிரையே சாகுபடி செய்துள்ளனர். பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஅள்ளி, போச்சம்பள்ளி, காவேரிப்பட்டணம், ராயக்கோட்டை, மத்தூர், ஊத்தங்கரை  என மாவட்டம் முழுவதும் சுமார் 40 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பெரும்பாலான விவசாயிகள் மழையை சார்ந்தே உள்ளனர்.
இத்தகைய நிலையில், மாவட்டத்தில் கடந்த இரு ஆண்டுகளாக பருவ மழை பொய்த்துள்ளதால் போதிய நீரின்றி மா மரங்கள் காயத் தொடங்கி உள்ளன. 
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக மழை அளவு 841 மி.மீ. ஆகும். குறிப்பாக ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், நவம்பர் ஆகிய மாதங்களில் பரவலாக பருவ மழை பெய்யும். ஆனால், நிகழாண்டில் பருவமழை பொய்த்து விட்டது. 2017 ஜூனில் 17.53 மி.மீட்டரும், ஜூலையில் 26.15 மி.மீ., ஆகஸ்ட்டில் 187 மி.மீ., செப்டம்பரில் 297 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. நிகழாண்டில் ஜூனில் 18.40 மி.மீ. மழையும், ஜூலையில் 9.5 மி.மீ., ஆகஸ்ட்டில் 18 மி.மீ, செப்டம்பரில் இதுவரை சுமார் 30.மி.மீ. மழை பதிவாகி உள்ளது. 
பருவ மழை பொய்த்ததால் கடலை போன்ற எண்ணெய் வித்துப் பயிர்கள் பாதிக்கப்பட்டாலும், பெரும்பாலான மா மரங்கள் காயத் தொடங்கி உள்ளன. இது விவசாயிகளிடம் வேதûனையுடன் கூடிய அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த பருவத்தில் மா விளைச்சலானது வழக்கத்துக்கு மாறாக ஒன்றரை மடங்கு அதிகமாக இருந்தது. இதனால், விலையும் மிக குறைவாக இருந்தது. 
வழக்கத்துக்கு மாறாக மகசூல் அதிகரித்ததாலும், மகசூலுக்கு பிறகு பெய்ய வேண்டிய மழை பொய்த்ததாலும் மா மரங்கள் காயத் தொடங்கியுள்ளன. சில விவசாயிகள் காயும் மரங்களை காப்பாற்ற தண்ணீரை விலைக்கு வாங்கி பாய்ச்சி வருகின்றனர். இருந்தாலும் போதிய ஈரப்பதம் இல்லாததால் மரங்கள் காய்வது விவசாயிகளை வேதனை அடையச் செய்துள்ளது.
மாவில் காவத்து மற்றும் உரமிடுதல்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தற்போது மழை பெய்யத் தொடங்கியுள்ளது மா விவசாயிகளிடம் நம்பிக்கையை துளிர் விடச் செய்துள்ளது. இத்தகைய நிலையில் மாவில் காவத்து மற்றும் உரமிடுதல் மிகவும் அவசியமாகிறது என்கிறார் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் தமிழ்செல்வன். 
இதுகுறித்து அவர் தெரிவித்தது: மா மரத்தில் வயதான மரக்கிளையில் மட்டுமே பூக்கள் பூக்கும். எனவே, காய்ந்த கிளைகள், நோய்த் தாக்குதலுக்கு உள்ளான மற்றும் குறுக்கும் நெடுக்குமாக உள்ள கிளைகள், தரையோடு ஒட்டியுள்ள கிளைகளை அப்புறப்படுத்த வேண்டும். வயதான மரங்களில் கிளைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். மா மரங்களின் வயதுக்கு ஏற்ப இரண்டு அல்லது மூன்று அடி தள்ளி உரமிடும் வகையில் வட்டப் பாத்தி அமைக்க வேண்டும். 
மண் பரிசோதனை செய்து, அதற்கு ஏற்பட உரமிடுதல் மூலம் மா மரங்களை காப்பது மட்டுமல்ல, வரும் பருவத்தில் கூடுதல் மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது என்றார் அவர். 
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழை பொய்த்ததால் காய்ந்து போன மா மரங்களுக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com