பாஜக, மஜதவின் கூட்டு அரசியல் பலத்தை சமாளிக்குமா காங்கிரஸ்?

அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, மஜத ஆகிய எதிர்க்கட்சிகளின் கூட்டு அரசியல் பலத்தை வீழ்த்தி, காங்கிரஸ் வெற்றி பெறுமா? என்பது கர்நாடக அரசியலாளர்களின் விவாதமாக உள்ளது.
பாஜக, மஜதவின் கூட்டு அரசியல் பலத்தை சமாளிக்குமா காங்கிரஸ்?

அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, மஜத ஆகிய எதிர்க்கட்சிகளின் கூட்டு அரசியல் பலத்தை வீழ்த்தி, காங்கிரஸ் வெற்றி பெறுமா? என்பது கர்நாடக அரசியலாளர்களின் விவாதமாக உள்ளது.

நஞ்சன்கூடு, குண்டல்பேட் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவை வீழ்த்தி, காங்கிரஸ் உற்சாகமடைந்துள்ளது.

இந்த வெற்றி அடுத்த ஆண்டு மே மாதம் நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் எதிரொலிக்குமா என்பதே விவாதமாகியுள்ளது. இடைத் தேர்தல் வெற்றியின் மூலம் எதிர்ப்பில்லாத, பலம் வாய்ந்த தலைவராக உருவெடுத்துள்ள முதல்வர் சித்தராமையா, தனது நான்கு ஆண்டுகால ஆட்சியில் இலவச அரிசி, இலவசபால், நிலவளம், மாணவர் நலநிதி போன்ற பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி அனைத்துத் தரப்பு மக்களின் நல்லாதரவையும் பெற்றுள்ளார்.

ஆனால், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் சித்தராமையாவை ஒதுக்கிவைத்து, காங்கிரஸ் கட்சியை இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளிவிடுவது காங்கிரஸ் அரசுக்கு எதிராக எதிர்வினையாற்றி வருவதை மறுப்பதற்கில்லை.

இயல்பாகவே ஆட்சிக்கு எதிரான மனப்போக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்களிடையே எழும். அதையும் மீறி முதல்வர் சித்தராமையா ஆட்சியை மக்கள் கவனிக்காமல் இல்லை. ஆதரவான அலை இல்லாவிட்டாலும், எதிரான அலை இல்லை என்பது காங்கிரஸýக்கு ஆறுதலாக உள்ளது.

முதல்வர் சித்தராமையாவின் வலிமையான தலைமை, பெரிய அளவில் உள்கட்சிபூசல் வெடிக்காதநிலை, ஆட்சிமீது மக்களுக்கு வெறுப்பு இல்லாமை ஆகியவை காங்கிரஸýக்கு சாதகமாக காணப்பட்டாலும், பிரதமர் மோடியின் செல்வாக்கு, ஆதரவு அலை இல்லாதது, எடியூரப்பாவின் ஜாதி அரசியல், கட்சியில் ஒற்றுமை இல்லாமை, சித்தராமையாவுக்கு எதிரான கட்சி மூத்த தலைவர்களின் விமர்சனங்கள் பாதகமாக உள்ளன.

கர்நாடகத்தில் ஆளுமை பொருந்திய ஜாதியாக விளங்கும் லிங்காயத்துகள் எடியூரப்பாவையும், அவரால் பாஜகவையும் ஆதரித்து வந்துள்ளனர். அடுத்தப்படியாக ஆளுமை பொருந்திய ஒக்கலிகர் சமுதாயத்தின் பெரும்பாலானோர் மஜத தேசியத் தலைவரும், முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவெ கெüடாவை ஆதரித்து வருகிறார்கள். பெரும்பான்மை மக்களான லிங்காயத்து, ஒக்கலிகர் வாக்குகளை காங்கிரஸ் பக்கம் திருப்ப முதல்வர் சித்தராமையா வியூகம் அமைத்திருக்கிறார்.

லிங்காயத்துகளின் நம்பிக்கையை பெற அந்த சமுதாயத்தைச் சேர்ந்த எஸ்.ஆர்.பாட்டீல் அல்லது எம்.பி.பாட்டீலை காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்க திட்டமிட்டிருக்கிறார். மேலும், ஒக்கலிகர் சமுதாயத்தைச் சேர்ந்த டி.கே.சிவக்குமாரை முன்னிலைப்படுத்தி அச்சமுதாய வாக்குகளை பெற முயற்சிக்கிறார்.

தான் சார்ந்திருக்கும் குருபா உள்ளிட்ட பிற்படுத்தப்பட்டோர் சமுதாய வாக்குகளை பெறவும் முதல்வர் சித்தராமையா திட்டமிட்டிருக்கிறார். அரசின் சாதனை, ஜாதி கணக்கு ஆகியவற்றை நம்பியிருக்கும் சித்தராமையா, தனது தலைமையில் தேர்தலை சந்திக்கப்போவதாகவும் அறிவித்திருக்கிறார்.

இதனிடையே, காங்கிரஸ் இல்லா கர்நாடகத்தை உருவாக்கப் போவதாகவும், 150 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கப்போவதாகவும் பாஜக மாநிலத்தலைவர் எடியூரப்பா அறிவித்திருக்கிறார். பிரதமர் மோடியின் செல்வாக்கு, அமித்ஷாவின் தேர்தல் வியூகம் ஆகியவற்றை எதிர்கொண்டு காங்கிரஸ் கட்சியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர என் பின்னால் அணிவகுக்க வேண்டும் என்று முதல்வர் சித்தராமையா நிபந்தனை விதிக்கிறார்.

வெற்றியை தாரகமந்திரமாக அளித்திருப்பதால் சித்தராமையாவின் தலைமைக்கு கட்சிமேலிடத் தலைமையும் பச்சைக்கொடி காட்டியிருப்பதோடு, அவரின் தேர்தல் வியூகத்திற்கு இணங்கி நடக்கவும் முடிவுசெய்திருக்கிறது.

பஞ்சாப் மாநிலத்தில் பெற்ற வெற்றியை கர்நாடகத்தில் தொடர சித்தராமையாவை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கவும் காங்கிரஸ் மேலிடம் தயங்காது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

தென்மாவட்டங்களில் மட்டும் பலமிக்க கட்சியாக விளங்கும் மஜதவை சமாளிக்கவும் சித்தராமையா திட்டம் வைத்திருக்கிறார். பொது எதிரியான பாஜகவை வீழ்த்துவதற்காக வெளிப்படையாக அல்லாமல் ரகசியமாக மஜதவுடன் தொகுதி பங்கீடு செய்துகொள்ளவும் காங்கிரஸ் யோசித்துவருகிறது.
 காங்கிரஸ் வெல்லும் வாய்ப்புள்ள தொகுதிகளில் பலவீனமான வேட்பாளரை மஜதவும், மஜத வெல்லும் வாய்ப்புள்ள தொகுதிகளில் பலவீனமான வேட்பாளரை காங்கிரஸýம் நிறுத்தி பாஜகவை வீழ்த்தத் திட்டமிட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள். பாஜக ஆட்சிக்கு வந்தால் தங்கள் வளர்ச்சியை முழுமையாக தடுத்துவிடும் என்பதை உணர்ந்துள்ள மஜத இதற்கு இணங்கும் என்றும் கூறப்படுகிறது. மஜதவை பலமாகவும், பலவீனமாகவும் பயன்படுத்தி, பிரதமர் மோடியின் நிழலில் இருக்கும் பாஜகவை வீழ்த்தி வெற்றிக்கொடியை நாட்ட முதல்வர் சித்தராமையா ஓராண்டுகால திட்டங்களை வகுத்திருக்கிறார்.

அவற்றை ஒவ்வொன்றாக செயல்படுத்தி அடுத்த ஓராண்டுக்குள் காங்கிரஸ் கட்சியின் பலத்தை திடமாக்க முடிவு செய்திருக்கிறார். இதற்காகவே பணபலம், ஆள்பலம், கட்சிபலம் மற்றும் வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்களை தேடும் பணியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது.

மேலும் பாஜகவை பலவீனப்படுத்தும் செயல்களில் எடியூரப்பா-ஈஸ்வரப்பாவின் மோதல் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவைத் தேர்தலுக்குள் பாஜகவை கண்ணுக்கு தெரியாமல் பிளவுபடுத்த முதல்வர் சித்தராமையா காய்களை நகர்த்திவருகிறார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com