வழக்குரைஞர்களுக்கு தொழில் தர்மம், நேர்மை வேண்டும்

சட்டப் படிப்பு முடித்து வழக்குரைஞர்களாக செல்லும் மாணவர்களுக்கு தொழில் தர்மம், நேர்மை வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.பாஸ்கரன் பேசினார்.

சட்டப் படிப்பு முடித்து வழக்குரைஞர்களாக செல்லும் மாணவர்களுக்கு தொழில் தர்மம், நேர்மை வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.பாஸ்கரன் பேசினார்.
சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியின் 23- ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கல்லூரி செயலர் வழக்குரைஞர் த.சரவணன் வரவேற்றார்.
கல்லூரியின் நிறுவனர் தலைவர் பேராசிரியர் ஆர்.வி.தனபாலன், கௌரவ அழைப்பாளர் மருத்துவர் கே.கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.பாஸ்கரன் பேசியது:
வழக்குரைஞர்களுக்கு தாய்மொழி அறிவோடு ஆங்கில மொழிப்புலமையும் இருக்க வேண்டியது அவசியமாகும். வழக்குரைஞர் தொழிலில் பெரும் சாதனைகள் புரிய வேண்டுமெனில் பல்துறைப் பாட அறிவும், தொடர்ந்து பல புத்தகங்களையும் படிப்பதன் மூலம் தங்களின் அறிவை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும் ஒழுக்கநெறி, சட்டத்தொழிலில் அர்ப்பணிப்புத் தன்மை, சட்டத்துறையில் சாதிக்க வேண்டுமென்ற உறுதிப்பாடு ஆகியவை சட்டம் படித்து பட்டம் பெற்ற மாணவ, மாணவியருக்கு அவசியம் வேண்டும்.
இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் பல தலைவர்களின் பங்களிப்பு இருந்தாலும் அவர்கள் அனைவரையும் விட மகாத்மா காந்தி மிகவும் பெரும் சாதனையாளராக விளங்கியதற்கு அவரின் சட்ட அறிவும், அர்ப்பணிப்பு உணர்வும் ஒரு காரணமாகும்.
சட்டம் படித்து வழக்குரைஞர்களாக வெளியேறும் மாணவ, மாணவிகள் தொழில் தர்மம், நேர்மை, வல்லமை ஆகியவைகளைத் தங்கள் வாழ்வில் கடைப்பிடித்து தங்களை உயர்த்திக் கொள்ள வேண்டும்.
மேலும் தங்களை உயர்த்திக் கொள்வதன் மூலம் தங்களின் குடும்பத்தினை உயர்த்திக் கொள்ள வேண்டும். குடும்பத்தினை உயர்த்திக் கொள்வதன் மூலம் தங்களின் நாட்டினை உயர்த்த முடியும். நாடு உயர்வதன் வழியாக இந்த சமுதாயமே மேம்படும் என்றார்.
117 பேருக்கு பட்டம்:
அதைத்தொடர்ந்து, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழத்தினால் வழங்கப்படும் சட்டவியல் இளையர் (பி.எல்.) 117 பட்டச் சான்றிதழையும், சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியினால் வழங்கப்பட்ட வெள்ளிப் பதக்கங்களையும் மாணவ, மாணவிர்களுக்கு நீதிபதி எஸ்.பாஸ்கரன் வழங்கினார்.
விழாவில் கல்லூரி முதல்வர் பாத்திமா பேகம், தலைமை நிர்வாக அலுவலர் மாணிக்கம் மற்றும் கல்லூரிப் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
அதைத்தொடர்ந்து, சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் கலந்து கொண்டு நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com