வீடுகள்தோறும் நூலகம் அமைக்கப்பட வேண்டும்: பெரியார் பல்கலை.பதிவாளர்

வீடுகள்தோறும் நூலகங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று பெரியார் பல்கலைக்கழகப் பதிவாளர் மா.மணிவண்ணன் வலியுறுத்தினார்.

வீடுகள்தோறும் நூலகங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று பெரியார் பல்கலைக்கழகப் பதிவாளர் மா.மணிவண்ணன் வலியுறுத்தினார்.
 பெரியார் பல்கலைக்கழகத்தில் நூலகத் தந்தை சீ.இரா.ரங்கநாதனின் 125-ஆவது பிறந்தநாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 பெரியார் பல்கலைக்கழக நூலக தகவல் அறிவியல் துறை மற்றும் சேலம் மாவட்ட நூலக ஆணைக்குழு இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியில் உதவிப் பேராசிரியர் ம.ஜெயப்பிரகாஷ் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பதிவாளர் மா.மணிவண்ணன் பேசியது.
 முகநூல், கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) ஆகிய சமூக வலைத்தளங்களின் பிடியில் இன்றைய நாள்கள் சென்று கொண்டிருக்கின்றன. சிறு குழந்தைகள் செல்லிடப்பேசியில் விளையாடுவதற்கு அடிமையாகி விடுவதைப் போல, பெரியவர்கள் சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாகி வருகின்றனர். இதனால் வாசிப்புப் பழக்கம் வெகுவாகக் குறைந்து வருகிறது. தொடர்ச்சியாக, செல்லிடப்பேசியைப் பயன்படுத்துவதால் கண்பார்வை பாதிப்பு உள்ளிட்ட உடல்நலக்குறைவு ஏற்படுவதுடன், மனப் பாதிப்பையும் ஏற்படுத்தி வருகிறது. இந்த பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு புத்தக வாசிப்பை தீவிரப்படுத்துவதன் மூலம் ஏற்படுத்த முடியும். வீடுகள்தோறும் உடனடியாக நூலகங்களை அமைத்து, குழந்தைகளை சிறுவயதில் இருந்தே வாசிப்பின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.இதன் மூலம், பள்ளிக் கல்வியுடன் பொதுவான பல தகவல்களைத் தெரிந்து கொள்ள முடியும்.இதேபோன்று, பொழுது போக்கு அம்சங்களுக்கு நேரத்தை செலவிடுவது போல,குழந்தைகளை அருகில் உள்ள நூலகத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றார்.
 இந்நிகழ்ச்சியையொட்டி, சேலம் மாவட்ட ஊரக நூலகங்களில் பணியாற்றும் நூலகர்கள் மற்றும் மாணவ, மாணவியருக்கு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், அனைத்து நூலகங்களுக்கும் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், மாவட்ட நூலக அலுவலர் வே.மாதேஸ்வரன், பெரியார் பல்கலைக்கழக நூலகர் ந.சுப்ரமணி, நூலக தகவல் அறிவியல் துறைத் தலைவர் சி.முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com