கொடிநாள் நிதி வசூல் இலக்கு ரூ.1.30 கோடி நிர்ணயம்: ஆட்சியர்

சேலம் மாவட்டத்தில் கொடிநாள் நிதி வசூல் இலக்காக ரூ.1.30 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தெரிவித்தார்

சேலம் மாவட்டத்தில் கொடிநாள் நிதி வசூல் இலக்காக ரூ.1.30 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தெரிவித்தார்.
 சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற முப்படையினர் கொடிநாள் நிகழ்ச்சியில், கொடிநாள் உண்டியலில் நிதியளித்து உண்டியல் வசூலை ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தொடங்கி வைத்தார்.
 இதைத் தொடர்ந்து, கொடிநாள் தின விழிப்புணர்வு பேரணி, முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கு தேநீர் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அவர் பேசியது:-
 முப்படை வீரர்களின் மகத்தான சேவையினை நினைவுபடுத்தும் வகையில், முப்படையினர் கொடிநாள் ஆண்டுதோறும் டிசம்பர் 7-இல் நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
 கொடிநாள் வசூலில் சேர்க்கப்படும் தொகையை கொண்டு முப்படையில் பணியாற்றிய வீரர்கள், அவர்களது குடும்பத்துக்குத் தேவையான உதவிகளை செய்திட பயன்படுத்தப்படுகிறது.
 இந்த வகையில், சேலம் மாவட்டத்துக்கு சென்ற ஆண்டு கொடிநாள் நிதி வசூல் இலக்காக ரூ.1.18 கோடி ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இலக்கைவிட அதிகமாக ரூ.18.78 லட்சம் அதிகம் வசூல் செய்யப்பட்டு, மொத்தம் ரூ.1.37 கோடி வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது.
 இந்த ஆண்டு கொடிநாள் நிதி வசூல் இலக்காக ரூ.1.30 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை போலவே கொடிநாள் வசூலை அனைவரும் அதிக அளவில் வழங்கிட வேண்டும்.
 தமிழ்நாடு முன்னாள் படைவீரர் நல நிதியில் இருந்து 2017-ஆம் ஆண்டில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்களுக்கு, இரண்டாம் உலகப்போர் ஆயுள்கால மாதாந்திர நிதியுதவி 172 நபர்களுக்கும், வறிய நிலையில் உள்ளோர்க்கு மாதாந்திர நிதியுதவி 44 நபர்களுக்கும், மருத்துவ காரணங்களுக்கான ஆயுள்கால மாதாந்திர நிதியுதவி 20 நபர்களுக்கும், திருமண மானியம் 13 நபர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
 மேலும், செயற்கை உறுப்புகளுக்கான நிதியுதவி 110 நபர்களுக்கும், வங்கிக்கடன் வட்டி மானியம் 8 நபர்களுக்கும், கல்வியுதவித்தொகை 188 நபர்களுக்கும், வருடாந்திர பராமரிப்பு மானியம் 9 நபர்களுக்கும், வீட்டுவரிச்சலுகை 4 பயனாளிகளுக்கும், பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற முன்னாள் படைவீரரின் மகனுக்கு ஊக்கப்பரிசு 2 நபர்களுக்கும் என மொத்தம் 570 நபர்களுக்கு ரூ.1.02 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
 முன்னாள் படைவீரர்களின் கோரிக்கையினை தனிகவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
 நிகழ்ச்சியில் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் தே.பிரபாகர், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சந்திரசேகர், முதன்மைக் கல்வி அலுவலர் அ.ஞானகெüரி, முப்படை வீரர் வாரிய உப தலைவர் பி.பாலசுப்ரமணியன், முன்னாள் படைவீரர் நல கண்காணிப்பாளர் அ.அலெக்ஜான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 சங்ககிரியில்....
 சங்ககிரியில் நடைபெற்ற கொடி நாள் வசூல் முகாமில், வருவாய்க் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் சுந்தரராஜன், வட்டாட்சியர் கே.அருள்குமார், வருவாய்த் துறை அலுலவர் சௌந்திரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com