"நோய் பாதிப்பை குறைக்கும் மருந்து பழங்கள் உற்பத்தி'

நோய் பாதிப்பை குறைக்கும் வகையில் மருந்தினை பழங்கள் வாயிலாக தயாரிக்கும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதாக மலேசியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்தார்.

நோய் பாதிப்பை குறைக்கும் வகையில் மருந்தினை பழங்கள் வாயிலாக தயாரிக்கும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதாக மலேசியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்தார்.
 பெரியார் பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்பவியல் துறை சார்பில் தாவர உயிரிதொழில்நுட்பவியலின் புதிய பரிமாணங்கள் எனும் தலைப்பில் தேசியக் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. துறைத் தலைவர் பேராசிரியர் பி.பெருமாள் வரவேற்றார். கருத்தரங்க செயலர் பி.வெங்கடாசலம் நோக்கம் குறித்து பேசினார். கருத்தரங்கை பெரியார் பல்கலைக்கழக புல முதன்மையர் (டீன்) வி.கிருஷ்ணகுமார் தொடக்கி வைத்து, ஆராய்ச்சிக் கட்டுரைத் தொகுப்பை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில், மலேசியப் பல்கலைக்கழக உயிரி வேதியியல் துறைப் பேராசிரியர் எஸ்.சுப்ரமணியம் பேசியது:
 வேளாண் நிலப்பரப்புகள் குறைந்து வரும் நிலையில், குறைவான இடத்தில் அதிக மகசூல் கிடைக்கும் வகையில், செயற்கை உரங்களின் பயன்பாட்டை முற்றிலும் குறைக்கும் வகையிலான தொழில்நுட்ப பங்களிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஊட்டச்சத்தை அளிக்கும் பழங்களில் உயிரிதொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மருந்தின் மூலக்கூறுகளை உருவாக்கும் ஆய்வு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஆய்வு வெற்றியடைந்தால், மருந்து மாத்திரைகளுக்கு பதிலாக, பழங்கள் மூலம் தீர்வை பெற முடியும்.இதன்மூலம் மருந்தினால் ஏற்படும் பக்க விளைவுகளைக் குறைக்க முடியும். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புற்றுநோய், பார்கின்சன் நோய், அல்சைமர் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன என்றார். இந்த நிகழ்ச்சியில் கருத்தரங்க அமைப்பாளர் என்.இளங்கோவன், ஏற்காடு மத்திய சுற்றுச்சூழல் ஆய்வு மைய விஞ்ஞானி எஸ்.கலியமூர்த்தி, உதவிப் பேராசிரியர்கள் எம்.எஸ்.சிவக்குமார், எஸ்.இளையபாலன் மற்றும் 150-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com