ஓமலூர் அருகே ரயில் தண்டவாளத்தில் லாரி டயர்கள் இருந்ததால் பரபரப்பு: போலீஸார் விசாரணை

ஓமலூர் அருகே ரயில் தண்டவாளத்தில் லாரி டயர்கள் வைக்கப்பட்டு இருந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓமலூர் அருகே ரயில் தண்டவாளத்தில் லாரி டயர்கள் வைக்கப்பட்டு இருந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம், ஈரோட்டிலிருந்து மேட்டூருக்கு சரக்கு மற்றும் பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக மேட்டூர் அனல் மின் நிலையத்துக்கு நெய்வேலியில் இருந்து தினசரி நிலக்கரி ஏற்றிவரும் சரக்கு ரயில் வந்து செல்கின்றது. இந்த இருப்புப் பாதை பகுதியில் கிராமங்கள் அதிகமுள்ளதால், ரயில்வே கேட்டுகளும் அதிகம் உள்ளன. இந்த நிலையில், அனைத்து ரயில்வே கேட் பகுதிகளிலும் தரைமட்டப் பாலங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஓமலூர் அருகேயுள்ள இலவமரத்தூர் பகுதியிலும் ரயில்வே தரைப் பாலம் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. அதனால், அந்தப் பகுதியில் கட்டுமானப் பணிக்காக லாரி டயர்களை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இங்குள்ள ரயில்வே கேட்டில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் ரயில்வே தண்டவாளத்தில் மூன்று லாரி டயர்கள் வைக்கப்பட்டு இருந்துள்ளன. அப்போது, மேட்டூரில் நிலக்கரியை ய இறக்கிவிட்டு ஓமலூர் நோக்கி சரக்கு ரயில் ஒன்று காலியாக வந்துள்ளது. வேகமாக வந்த அந்த ரயில் தண்டவாளத்தில் இருந்த டயர்கள் மீது மோதியதில் வேகம் குறைந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் ரயிலை நிறுத்திவிட்டு பார்த்துள்ளார். அப்போது ரயிலின் அடியில் லாரி டயர்கள் மாட்டி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ரயில்வே தண்டவாளங்களில் சுமார் அரைமணி நேர சோதனைக்குப் பிறகு அந்த ரயில் ஓமலூர் சென்றுள்ளது. இதனைத் தொடர்ந்து சம்பவம் குறித்து ஓமலூர் ரயில்வே கண்காணிப்பாளர் பழனிசாமி, சேலம் ரயில்வே போலீஸில் புகார் அளித்தார். இந்தப் புகாரை தொடர்ந்து ரயில்வே போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில், அதே பகுதியைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் சேகர் (40) என்பவர் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில், இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருவது தெரிய வந்துள்ளது.
மேலும், இந்தச் சம்பவம் குறித்து ஈரோடு ரயில்வே காவல் ஆய்வாளர் சின்னத்தங்கம் தலைமையிலான போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மனநலம் பாதிக்கப்பட்டவர் மீது திசை திருப்பும் வகையில் சமூக விரோதிகள் யாராவது இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனரா என்கிற கோணத்திலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com