மேட்டூர் காவிரியில் த.மா.கா.வினர் நூதன வழிபாடு

மேட்டூர் காவிரி ஆற்றில் வருண பகவானுக்கு மனு அனுப்பி த.மா.கா.வினர் ஞாயிற்றுக்கிழமை நூதன வழிபாடு நடத்தினர்.

மேட்டூர் காவிரி ஆற்றில் வருண பகவானுக்கு மனு அனுப்பி த.மா.கா.வினர் ஞாயிற்றுக்கிழமை நூதன வழிபாடு நடத்தினர்.
 மேட்டூர் அணையின் நீர்த்தேக்கப்பகுதியான பண்ணவாடி பரிசல் துறையில் காவிரிக் கரையில் இந்த வழிபாடு நடைபெற்றது. த.மா.கா. விவசாய அணி மாநிலத் தலைவர் புலியூர் நாகராஜன் மற்றும் நிர்வாகிகள் காவிரிக் கரையில் நெல் படையலிட்டு, ஆற்றில் நெல் தூவினர். விவசாயிகளின் கோரிக்கைகள் அடங்கிய மனுவைத் தட்டில் வைத்து காவிரி ஆற்றில் விட்டனர்.
 இதுகுறித்து புலியூர் நாகராஜன் செய்தியாளர்களிடம் கூறியது: காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படியும், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படியும் கர்நாடகம் தமிழகத்துக்கு உரிய நீரை வழங்க மறுத்து வருகிறது. கர்நாடக அரசு காவிரி நீரை வழங்க மறுப்பதாலும், அதனை உரிய காலத்தில் பெறுவதற்கு மத்திய மாநில அரசுகள் முறையாக நடவடிக்கை எடுக்காத காரணத்தாலும் காவிரி டெல்டா மாவட்டங்கள் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, 6 ஆண்டுகளாக நெல் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.
 நடுவர் மன்ற தீர்ப்பையும், உச்ச நீதிமன்ற உத்தரவையும் கர்நாடகம் மதிக்காமல் இருப்பதும் அதனை மத்திய அரசு வேடிக்கைப் பார்ப்பதும் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு ஊறுவிளைவிக்கும் செயலாகும். நதிநீர்ப் பங்கீட்டு முறைப்படி ஆற்றின் கடைமடை பகுதிகள் வரை தண்ணீர் பாய்ந்து பயன்பெற வேண்டும். கர்நாடக மாநிலத்திலிருந்து தண்ணீர் பெற தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனி, இவர்கள் விவசாயிகளைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கமாட்டார்கள் என்பதால்தான் விவசாயிகளைக் காப்பாற்றுபவன் இறைவன் ஒருவனே என்று காவிரித் தாயிடம் மனு அளித்தோம் என்றார்.
 இந்த நிகழ்ச்சியில் த.மா.கா. மாநில இணைச் செயலர் கே.பி.என்.மகேஸ்வர், சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் கரு.வெ.சுசீந்திரகுமார். மாநில மருத்துவப் பிரிவுத் தலைவர் டாக்டர் ரகுநாதன், கொளத்தூர் வட்டார தலைவர் நாகராஜரெட்டி உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com