விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி ஆட்சியரிடம் தமாகா மனு

விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் விவசாய அணி சார்பில்

விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் விவசாய அணி சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் வா.சம்பத்திடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
 தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் விவசாய அணியின் மாநிலத் தலைவர் புலியூர் நாகராஜன் தலைமையில் ரவிவர்மா, சுசீந்திரகுமார், முன்னாள் எம்.பி.கந்தசாமி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்றனர்.
 ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன் திரண்ட கட்சியினர் கூட்டுறவு வங்கிகளில் விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கோஷங்களை எழுப்பினர்.
 காவல்துறையினர் நுழைவு வாயிலேயே அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து புலியூர் நாகராஜன் உள்ளிட்டோர் சாலையில் அமர்ந்து போராடினார். பின்னர் 5 பேரை மட்டும் மனு அளிக்க ஆட்சியர் அலுவலகத்துக்குள் அனுமதித்தனர். அதன்பின்பு மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் கோரிக்கை மனுவை வழங்கினர். இதுதொடர்பாக, புலியூர் நாகராஜன் செய்தியாளர்களிடம் கூறியது:
 மேட்டூர் அணை திறக்கப்படாததால் டெல்டா பகுதியில் உள்ள விவசாயிகள் துயரமான நிலையில் உள்ளனர். குறுவை, சம்பா சாகுபடி பொய்த்துவிட்ட நிலையில், டெல்டா பகுதிகளில் குடிநீருக்கே தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
 இதுவரை டெல்டா பகுதியில் 25 லட்சம் டன் குறுவை நெல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கே உணவளித்த தஞ்சை திருவாரூர் விவசாயிகள் தற்போது இலவச அரிசிக்காக நியாய விலைக் கடைகளில் வரிசையில் நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
 மேலும் 5 ஏக்கர் நிலம் கொண்ட விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும். கர்நாடகம் இதுவரை 22 டி.எம்.சி. தண்ணீர் வழங்கியிருக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com