தம்மம்பட்டியில் ஜல்லிக்கட்டு விழா: 65 பேர் காயம்

சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஜல்லிக்கட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஜல்லிக்கட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 திருச்சி பிரதான சாலையில் தனியார் பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு அருகில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் காலை 8.30 மணி முதல் மாலை 4.45 மணி வரை ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றது.
 தம்மம்பட்டி ஊர் பொதுமக்கள் சார்பில் நடத்தப்பட்ட இந்த ஜல்லிக்கட்டு விழாவில் மதுரை, பாலமேடு, புதுக்கோட்டை, லால்குடி, பொன்னமராவதி, பெரம்பலூர், தஞ்சாவூர், சமயபுரம், சேலம், ஆத்தூர், நாமக்கல், ராசிபுரம்,திருச்செங்கோடு, திருச்சி, சிவகங்கை, கரூர், குளித்தலை உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து 630 காளைகள் பங்கேற்றன. 200-க்கும் மேற்பட்ட மாடு பிடி வீரர்களும் சீருடையில் பங்கேற்று மாடுகளை பிடித்தனர்.
 காளைகளின் கொம்பு, நெற்றிப் பகுதிகளில் வெள்ளி அரைஞாண்கொடிகள், வெள்ளி, தங்கக் காசுகள், பட்டுத் துண்டுகள் கட்டப்பட்டிருந்தன. விழாவில், காளைகள் அனைத்தும் வாடிவாசல் பின்புறம் உள்ள கள்ளிப்பாதையில் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டு, ஒவ்வொன்றாக விடப்பட்டன.
 காளைகள் சீறிப்பாய்ந்த பகுதியில் மாடுபிடி வீரர்களும், விழாக் குழுவினர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளில் ஒரு சில காளைகளை மட்டுமே வீரர்கள் பிடித்தனர்.
 காளைகளைப் பிடித்த வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசாக இரு சக்கர வாகனம், குளிர்சாதனப் பெட்டி, சலவை இயந்திரம், மிதிவண்டி, கட்டில், பீரோ, பாத்திரங்கள், ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள செல்லிடப்பேசிகள் என சுமார் மூன்றரை லட்ச ரூபாய் மதிப்புள்ள பரிசு பொருள்கள் வழங்கப்பட்டன. இந்த ஜல்லிக்கட்டு விழாவில் 65 பேர் காயமடைந்தனர். இதில் வேடிக்கை பார்க்க வந்தவர்களே அதிகளவில் காயம் அடைந்தனர்.
 காயமடைந்த 65 பேருக்கும் தம்மம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் வேலுமணி தலைமையிலான மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் 16 பேர் தீவிர சிகிச்சைக்காக சேலம், ஆத்தூர் மருத்துவமனைகளுக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர்.
 இந்த விழாவைக்காண சுமார் ஒன்றரை லட்சம் பேர் வந்திருந்தனர். புதுக்கோட்டையைச் சேர்ந்த செந்தில் தொண்டைமான் என்பவருக்குச் சொந்தமான நான்கு காளைகள் முழுவதும் குளிரூட்டப்பட்ட கேரவன் வாகனத்தில் அழைத்து வரப்பட்டிருந்தன. விழாவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தம்மம்பட்டி போலீஸார் மற்றும் விழாக்குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com