நலிந்துவரும் கைத்தறித் தொழில்: தொழிலாளர்கள் வேதனை

தமிழகத்தில் விவசாயத்துக்கு அடுத்த நிலையில் உள்ளது நெசவுத் தொழில். இந்தத் தொழில் காலப் போக்கில் பல்வேறு பரிமாணங்களை சந்தித்து,
நலிந்துவரும் கைத்தறித் தொழில்: தொழிலாளர்கள் வேதனை

தமிழகத்தில் விவசாயத்துக்கு அடுத்த நிலையில் உள்ளது நெசவுத் தொழில். இந்தத் தொழில் காலப் போக்கில் பல்வேறு பரிமாணங்களை சந்தித்து, வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், பழைமையும், கலாசாரமும் ஒருங்கே இணைந்த கைத்தறி நெசவுத் தொழில் நாளுக்கு நாள் நலிவடைந்து வருவது மறுக்க முடியாத உண்மையாகும்.

எடப்பாடி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளான வெள்ளாண்டிவலசு, கச்சுப்பள்ளி, நாச்சிப்பாளையம் பகுதியில் உள்ள கூட்டுறவு கைத்தறி சங்க உறுப்பினர்கள் மூலம் கைத்தறியில் நெய்யப்பட்ட தேன்கூடு, தோட்டபாய், வாழமட்டை உள்ளிட்ட துண்டு ரகங்களும், பல வண்ணத் தரை விரிப்புகளும் நாடு முழுவதும் நுகர்வோர்களை கவர்ந்து விற்பனையில் கொடிகட்டி பறந்த நிலை தற்போது முற்றிலும் மாற்றமடைந்துள்ளது. இதனால் சம்பந்தபட்ட கூட்டுறவு கைத்தறிச் சங்கத் தறிக்கூடங்கள் வேறிச்சோடிக் காணப்படும் அவலநிலை உருவாகியுள்ளது. மேலும் கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட 22-க்கும் மேற்பட்ட ரகங்களை எடப்பாடி, பவானி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் விசைத்தறிக் கூடங்களில் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படுவதால் விசைத்தறியுடன் போட்டிப் போட முடியாமல் கைத்தறி நெசவாளர்கள் கலங்கி நிற்கின்றனர்.

எடப்பாடி கூட்டுறவு விற்பனையாளர் சங்கத்தில் கடந்த 20 ஆண்டுகளாக உறுப்பினர்களாக இருந்து கைத்தறி நெசவு செய்து வரும், தேவூர் அருகில் உள்ள மயிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த நெசவுத்தொழிலாளி கோபால் (47) கூறியது:
 கடந்த 20 ஆண்டுகளாகக் கைத்தறி நெசவுத்தொழில் செய்து வருகிறேன். எடப்பாடி கூட்டுறவு கைத்தறி சங்கத்தில் நூல் வாங்கி அதனை வண்ணத் தரை விரிப்பாக நெய்து தருகிறேன். ஒரு தரை விரிப்புக்கு ரூ.245 கூலியாகச் சங்கத்தில் வழங்கப்படுகிறது. இதில் ரூ.50 நூல் சுற்றும் நபருக்கும், மீதியுள்ள ரூ.195 எனக்கும் கிடைக்கும். நாள் ஒன்றுக்கு 1 தரை விரிப்பு தான் நெய்ய முடியும். ஆனால் பவானி பகுதில் இயங்கும் விசைத்தறிக் கூடங்களில் இதே போன்ற தரை விரிப்பை ஒரு நெசவுத் தொழிலாளி தினசரி 5 வரை நெய்து முடித்து விடுகிறார். இதனால் இப்பகுதி கைத்தறி நெசவாளர்கள் செய்வதறியாது திகைத்து நிற்கிறோம் என்றார்.

எனவே, தமிழக அரசு கைத்தறிக்கென ஒதுக்கியுள்ள ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்யப்படுவதைத் கட்டுப்படுத்தும் நோக்கில், திருச்செங்கோட்டை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஆய்வாளர்கள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு எடப்பாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி கைத்தறி நெசவாளர்களின் நலன் காக்க வேண்டும் என்பதே இப்பகுதி கைத்தறி நெசவாளர்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com