"பொலிவுறு நகரம்' திட்டப் பணிகள் ஆய்வு

பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ள பழைய பேருந்து நிலையம் அருகில் மண் பரிசோதனை செய்யும் பணிகளை

பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ள பழைய பேருந்து நிலையம் அருகில் மண் பரிசோதனை செய்யும் பணிகளை மாநகராட்சி ஆணையர் ரெ. சதீஷ் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.
பொலிவுறு நகரம் திட்டத்துக்கு சேலம் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் சேலம் மாநகராட்சியில்  இரண்டு பிரிவுகளாக செயல்படுத்தப்பட உள்ளன.
சேலம் மாநகரில் பகுதி அடிப்படையில் அபிவிருத்தி செய்தல் திட்டத்தின் கீழ் பழைய பேருந்து நிலையம், வ.உ.சி. மார்க்கெட் பகுதிகளை உள்ளடக்கிய 690 ஏக்கர் பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியத் தேவைகளை உள்ளடக்கிய  முழுமையான உட்கட்டமைப்புகள்  ஏற்படுத்தப்பட உள்ளன.
மேலும், பகுதி அடிப்படையில் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் போக்குவரத்து மேலாண்மை, பேருந்து முனையம் அபிவிருத்தி செய்தல், நவீன வாகன நிறுத்தம் அமைத்தல், பொது போக்குவரத்து வசதி ஏற்படுத்துதல், சாலை வடிவமைப்பு மற்றும் மறு வடிவமைப்பு பணிகள் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தானியங்கி சிக்னல்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
அரசு கட்டடங்கள் வணிக வளாகங்கள், வ.உ.சி. அங்காடியை புதுப்பித்தல்,  திருமணிமுத்தாறு அபிவிருத்தி திட்டம், போஸ் மைதானம் அபிவிருத்தி பணிகள், தகவல் பலகை மற்றும் பூங்காக்கள் அமைத்தல், சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்தல், மின் சேமிப்பு, எல்.இ.டி. விளக்குகள் பொருத்துதல் மற்றும் குடிநீர் திட்டம், மழைநீர் வடிகால் அமைத்தல், திடக்கழிவு மேலாண்மை போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்படும்.
நகர் முழுமைக்கான திட்டத்தின் கீழ் சேலம் மாநகர் முழுமைக்கும் மின் ஆளுமை மூலம் செயலமைப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
குடிநீர் விநியோகத்தில் அளவுமானி பொருத்துதல், கணினி மூலம் போக்குவரத்து மேலாண்மையை கையாளுதல், பாதுகாப்பான வாகன நிறுத்துமிடங்களை அமைத்தல், கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்துதல், தெருவிளக்குகளை கண்காணிப்பு செய்தல் உள்ளிட்ட வசதிகளை கண்காணித்திட ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை அமைத்தல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
மேற்கூறிய திட்டங்கள் செயல்படுத்துவதற்கு ஏதுவாக தேர்வு செய்யப்பட்டுள்ள பகுதிகளில் மண் பரிசோதனைகள் ஆய்வு செய்யப்பட்டு, அறிக்கைகள் பெறப்பட்ட பின்னர், இரண்டாம்கட்டப் பணிகள் தொடங்குவதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும் என ஆணையர் ரெ.சதீஷ் தெரிவித்தார்.
புதிய பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்த ஆணையர், பேருந்து நிறுத்தங்களில் கான்கிரீட் தளம் அமைக்கப்படவுள்ள இடங்களையும், வாகன நிறுத்தும் இடங்களையும் பார்வையிட்டார்.
ஆய்வின் போது, செயற்பொறியாளர் ஜி.காமராஜ், உதவி பொறியாளர் எம்.சுமதி, கே. செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com