புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முதல்நிலை சரிபார்க்கும் பணி

சேலம் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை முதல்நிலை சரிபார்க்கும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை முதல்நிலை சரிபார்க்கும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்க்கும் பணி மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ரோகிணி ராம்தாஸ் தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 இதில் ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் பேசியது: இந்திய தேர்தல் ஆணையம் சேலம் மாவட்டத்துக்கு பெங்களூரு பெல் நிறுவனம் மூலம் புதிதாக 8,200 வாக்குப்பதிவு அலகுகள் மற்றும் 4,960 கட்டுப்பாட்டு அலகுகள் மட்டும் பெறப்பட்டு, மாவட்ட மின்னணு கிடங்கு அறை எண் 8 ல் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை முதல்நிலை சரிபார்ப்புப் பணி மாவட்ட நிர்வாகத்தின் முழுக் கட்டுப்பாட்டில் நடத்தப்பட உள்ளது.
 மேலும் இப்பணிக்கு மேற்பார்வையாளராக தனித்துணை ஆட்சியர் ஆர்.முருகன் நியமனம் செய்யப்பட்டு மேற்பார்வையில் அனைத்து பணிகளும் நடத்தப்பட உள்ளன.
 இந்த முதல்நிலை சரிபார்ப்புப் பணியில் அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களிலும் இயற்பொருள், தொழில்நுட்ப மற்றும் இயல்பான செயல்திறன் குறித்து ஆராய்ந்து சரிபார்ப்புப் பணி நடத்தப்பட உள்ளது.
 முதல் கட்டமாக இயந்திரங்கள் எடுத்து வரப்பட்டு துடைத்து தூய்மைப்படுத்தும் பணி செய்யப்படும். அடுத்து இயந்திரம் பொறியாளர்களால் கண்பார்வையாளராக எடுத்து ஆராயப்பட்டு இயந்திரத்தின் அனைத்துப் பகுதிகளும் சேதாரம் இல்லாமல் இயங்குகிறதா என சோதிக்கப்படும்.
 இந்தப் பணியின் போது இயந்திரத்தின் தனியறைப் பகுதிகள் அனைத்தும் திறக்கப்பட்டு அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுக்கு காண்பிக்கப்பட்டு இயந்திரத்தின் அனைத்துப் பகுதிகளும் உண்மைத் தன்மையானது தான் என சோதித்து அறியப்படும்.
 இந்த முதல்நிலை சரிபார்ப்புப் பணி குறித்த நிலையான இயக்க செயல்முறை புத்தகம் தனியே முதல்நிலை சரிபார்ப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது.
 அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் அதனைப் பார்வையிட்டு நடைமுறைகளை அறிந்து கொள்ளலாம். அனைத்து இந்திரங்களிலும் மாதிரி வாக்குப்பதிவு அனைத்து 16 வேட்பாளர்கள் பொத்தான்களும் ஒரு முறை வாக்களிக்கப்பட்டு முடிவுகள் சரியாக இருக்கிறதா என பார்க்கப்படும்.
 பின்னர் மேற்கண்ட மாதிரி வாக்குகள் அனைத்தும் அழிக்கப்படும். இதே வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை இயந்திரம் என்றால் மாதிரி வாக்குப்பதிவு அனைத்து 16 வேட்பாளர் பொத்தான்களும் ஆறு முறை வாக்களிக்கப்பட்டு முடிவுகள் சரியாக இருக்கிறதா என வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை துண்டுச் சீட்டு எண்ணிக்கை மூலம் சரிபார்க்கப்படும்.
 இதன் பின்னர் செல்லிடப்பேசி செயலி மூலமாக இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு செய்தது குறித்த பதிவுகள் பதிவேற்றம் செய்யப்படும்.
 அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முதல்நிலை சரிபார்ப்புப் பணி முடிக்கப்பட்ட இயந்திரங்களில் குறிப்பாக இல்லாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக இயந்திரத்தை தேர்ந்தெடுத்து தானே மாதிரி வாக்குப்பதிவு செய்து சரிபார்க்கலாம். சரிபார்த்த பின்னர் இதற்காக வைக்கப்பட்ட பதிவேட்டில் சரிபார்ப்பு செய்வது குறித்து கையொப்பம் செய்யப்பட வேண்டும்.
 முதல்நிலை சரிபார்ப்புப் பணி முடித்த இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு 1 சதவீத இயந்திரங்களில் 1,200 வாக்குகளும், 2 சதவீத இயந்திரங்களில் 1,000 வாக்குகளும் மறுபடியும் 2 சதவீத இயந்திரங்களில் 500 வாக்குகளும் ஆக வாக்குப்பதிவு செய்து முடிவுகள் சரியாக உள்ளதா என சரிபார்க்கப்படும்.
 முதல்நிலை சரிபார்ப்புப் பணி முடித்த பின்னர் அந்த கட்டுப்பாட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் உட்பக்கப் பகுதிகள் மறுபடியும் அணுக முடியாதவாறு இளஞ்சிவப்பு காகித முத்திரை வைத்து கட்டப்படும். இப்பணி வருகை புரிந்துள்ள அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் நடத்தப்படும்.
 இந்த இளஞ்சிவப்பு காகித முத்திரை பொறியாளர் அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் முதல்நிலை சரிபார்ப்பு மேற்பார்வையாளர் கையொப்பமிட வேண்டும். எந்த கட்டுப்பாட்டு அலகில் எந்த இளஞ்சிவப்பு காகித முத்திரை வைத்து கட்டப்பட்டுள்ளது என்பது குறித்து தனியே ஒரு பதிவேடு பராமரிக்கப்படும் என்றார்.
 நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.சுகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சி.விஜய்பாபு, தனி வட்டாட்சியர் தேர்தல் (பொறுப்பு) த.முகமது குதரதுல்லா, பெங்களூரு பெல் நிறுவன பொறியாளர் ஜெய் பிரகாஷ் கெüதம் தலைமையிலான 17 பொறியாளர்கள், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com