ஆடி அமாவாசை:அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி அமாவாசையையொட்டி சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயிலில் சனிக்கிழமை சிறப்பு


ஆடி அமாவாசையையொட்டி சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயிலில் சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயிலில் ஆடி அமாவாசையையொட்டி சுவாமிகளுக்கு இளநீர், பால், தயிர், திருமஞ்சனம், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. அதிகாலையில் இருந்தே பக்தர்கள் அதிகளவில் வந்திருந்து சுவாமிகளை வழிபட்டுச் சென்றனர். இக்கோயில் வளாகத்தில் உள்ள சந்தோஷசனி பகவான் உடனமர் நீலாதேவியுடன் சேர்ந்து இருப்பதாலும், சனிக்கிழமை ஆடி அமாவாசை தினத்தையொட்டி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. வழக்கத்தைவிட அதிகமான பக்தர்கள் சுவாமிகளை வழிபட்டுச் சென்றனர்.
இளம்பிள்ளை சித்தர் கோயில்... இளம்பிள்ளை அருகே உள்ள சித்தர் கோயிலில் ஆடிஅமாவாசையையொட்டி அதிகாலை முதலே அருள்மிகு சித்தேஸ்வரரை வரிசையில் காத்திருந்து பக்தர்கள் வழிபட்டுச் சென்றனர். சுவாமியை வழிபட்ட பக்தர்கள் கோயிலின் பின்புறத்தில் உள்ள நந்திகுளத்தில் வேண்டுதல்களை நிறைவேற்ற உப்பு, மிளகு, வெல்லம் ஆகியவைகளை போட்டு வழிபட்டுச் சென்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள காளியம்மன், பாலமுருகன் சுவாமிகளையும் வழிபட்டனர்.
எடப்பாடியில்... ஆடி அமாவாசையையொட்டி எடப்பாடி மற்றும் சுற்றுவட்டாரக் காவிரிக்கரைப் பகுதியில் சனிக்கிழமை
திரண்ட பொதுமக்கள், காவிரியில் புனித நீராடி, தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
பாரம்பரியமாக நடைபெற்று வரும் இந்த நிகழ்விற்காக சனிக்கிழமை அதிகாலை முதலே, எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி படித்துறை, கூடக்கல், கோட்டைமேடு உள்ளிட்ட காவிரிக் கரைப் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். காவிரியில் புனித நீராடிய பொதுமக்கள் அங்குள்ள விநாயகர் கோயிலில் வழிபாடு செய்தனர். தொடர்ந்து அவர்கள் சூரிய வழிபாடு செய்து, மறைந்த தங்களது தாய், தந்தை மற்றும் முன்னோர்களின் பெயரில் தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
மேலும், எள்ளுடன் புனித நீர் இரைத்து, அகல் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். மேலும் முன்னோர்களுக்கு பிடித்த உணவு வகைகளை படையலிட்டு காகங்களுக்கு அளித்தனர்.
பூலாம்பட்டி கைலாசநாதர் கோயில், கோட்டமேடு விநாயகர் சன்னதி, கல்வடங்கம் அங்காளபரமேஸ்ரி கோயில் உள்ளிட்ட காவிரிக் கரை கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
தம்மம்பட்டியில்... தம்மம்பட்டி, கெங்கவல்லி பகுதியில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பொதுமக்கள் குலதெய்வம் மற்றும் பித்ருக்கள் வழிபாடு செய்தனர்.
தம்மம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆற்றங்கரையோரம், புரோகிதர்கள் உதவியுடன் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.அதேபோல் குடும்பத்துடன், குலதெய்வ கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்தனர்.
ஆத்தூரில்... ஆத்தூரை அடுத்த நரசிங்கபுரத்தில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை நள்ளிரவில் சிறப்பு பூஜை நடைபெற்றது. .
நரசிங்கபுரத்தில் வசிஷ்ட நதிக்கரையோரம் உள்ள பெரியநாயகி அம்மன் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு பாலாபிஷேகம், மிளகாய் ஹோமம், பூசணிக்காய் பலியிடுதல் நடைபெற்றது.இதையடுத்து பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அமாவாசை தோறும் பூஜைகள் நடைபெறும் என பூசாரி என்.காளீஸ்வரன் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com