ரூ.23 லட்சம் மதிப்புள்ள பான் மசாலா பொருள்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவை, மதுரைக்கு கடத்திச் செல்ல முயன்ற ரூ.23 லட்சம் மதிப்புள்ள பான் மசாலா பொருள்களை சேலத்தில் போலீஸார் பறிமுதல் செய்தனர்.


பெங்களூரில் இருந்து கோவை, மதுரைக்கு கடத்திச் செல்ல முயன்ற ரூ.23 லட்சம் மதிப்புள்ள பான் மசாலா பொருள்களை சேலத்தில் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பெங்களூரில் இருந்து புகையிலை பொருள்கள் சேலம் வழியாகக் கடத்தி வரப்பட்டு, தமிழகத்தில் விற்பனையாகிறது. இதன்பேரில் உணவுப் பாதுகாப்புத் துறையினர், காவல் துறையினர் உள்ளிட்டோர் கடத்தலில் ஈடுபடுவோரையும், பதுக்கி வைத்து விற்பனை செய்து வருபவர்களையும் கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில் பெங்களூரில் இருந்து சேலம் வழியாக கோவை, ஈரோடு, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பான்பராக், குட்கா பொருள்கள் லாரி, பேருந்துகளில் கடத்திச் செல்வதாக சேலம் மாநகரக் காவல் ஆணையர் சங்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து காவல் துறை துணை ஆணையர்கள் சுப்புலட்சுமி, தங்கதுரை ஆகியோர் தலைமையில் தனிப்படை போலீஸார்
வெள்ளிக்கிழமை நள்ளிரவில் ஓமலூர் சுங்கச்சாவடி பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 3 மினி வேன்களை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் பான்பராக், குட்கா , புகையிலை பாக்கெட்டுகள் இருந்தன .
இதையடுத்து வேன்களை ஓட்டி வந்த சேலத்தைச் சேர்ந்த கார்த்திக், தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தைச் சேர்ந்த சக்திவேல் மற்றும் செல்வகுமார், சேலம் மெய்யனூரைச் சேர்ந்த மாதேஷ் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் மூன்று மினி வேன்களில் இருந்து சுமார் 150 மூட்டைகளில் இருந்த ரூ.23 லட்சம் மதிப்பிலான பான்பராக், குட்கா மற்றும் புகையிலை பொருள்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மூன்று வேன்களையும் சூரமங்கலம் போலீஸார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com